பியாங்யாங்: “நீங்கள் பேசுவது அபத்தத்தின் உச்சம்” என்று தென் கொரிய அதிபரை கிம்மின் சகோதரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
“வடகொரியா அணு ஆயுத சோதனைகளை கைவிட்டால் நாங்கள் பொருளாதார உதவிகளை செய்யத் தயார்” என தென் கொரிய அதிபர் யூன் சுக்-இயோல் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தென் கொரியாவின் கருத்தினை கிம்மின் சகோதரியும், வட கொரியாவின் சக்தி வாய்ந்த பதவியில் இருப்பவருமான கிம் யோ ஜாங் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “தென்கொரிய அதிபரின் இந்த அழைப்பு அபத்தத்தின் உச்சம். உங்களின் பொருளாதார உதவிகளும் எங்களின் மரியாதையும், அணு ஆயுதமும் சமமா? இது ஒரு நல்ல கனவு யூன்… நாங்கள் ஒன்றை உங்களுக்கு தெளிவுப்படுத்த நினைக்கிறோம். உங்களுடன் நேருக்கு நேர் அமர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட எங்களுக்கு விருப்பம் இல்லை” என்றார்.
வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங், கிம்முக்கு அடுத்து சக்தி வாய்ந்த நபராக அந்நாட்டில் அறியப்படுகிறார். அதிபர் கிம்மின் சொந்தத் தங்கையான கிம் யோ ஜாங் அந்நாட்டின் அதிகாரம் படைத்த அமைப்பான வட கொரியத் தொழிலாளர் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும் முக்கியமான அரசியல் தலைவராகவும் உள்ளார்.
கிம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்தே, தன்னுடைய சகோதரி கிம் யோ ஜாங்குக்கு அரசியலில் முக்கியப் பொறுப்புகள் வழங்கியுள்ளார்.
மீண்டும் சோதனை: வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் மோதல் வலுத்தும் வரும் நிலையில், வடகொரியா மீண்டும் இரண்டு புதிய ஏவுகணை சோதனைகளை நடத்தி இருப்பதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.