அலிகார்க்: சுதந்திர தினத்தை முன்னிட்டு உத்தரபிரதேசம் அலிகர் முஸ்லிம் கல்லூரி சார்பில் நடத்தப்பட்ட தேசியக் கொடி ஊர்வலத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சில மாணவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் கடந்த 15-ம் தேதி நாடு முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தில் வீடுகள் தோறும் மக்கள் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும், தேசியக் கொடி ஊர்வலத்தை நடத்த வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். அதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகள், பொதுமக்கள் சார்பில் தேசியக் கொடி ஊர்வலம் நடைபெற்றது.
அந்த வகையில், உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகார்க் முஸ்லிம் கல்லூரியிலும் கடந்த 13-ம் தேதி தேசியக் கொடி ஊர்வலம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மாணவர்களும், பேராசிரியர்களும் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மாணவர்கள் ‘இந்தியா ஜிந்தாபாத்’ கோஷத்தை எழுப்பியபடி சென்றனர். அப்போது திடீரென ஊர்வலத்தின் பின் பகுதியில் இருந்து ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற கோஷம் எழுந்தது. இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த மாணவர்கள் சிலர் இதுகுறித்து ஊர்வலத்தில் பங்கேற்ற கல்லூரி முதல்வரிடமும், பேராசிரியர்களிடமும் முறையிட்டனர். ஆனால் அவர்கள் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது.
இதனிடையே, ஊர்வலத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பும் மாணவர்களின் வீடியோ கல்லூரியில் பரவியது. இதன் தொடர்ச்சியாக, அந்த வீடியோவை அடிப்படையாக கொண்டு அலிகார்க் காவல் நிலையத்தில் மாணவர்கள் புகார் அளித்தனர். இதன்பேரில், பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பிய மாணவர்கள் மீதும், புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்காத கல்லூரி முதல்வர் மற்றும் மேலாளர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அலிகார்க் மாவட்ட எஸ்.பி. பலாஷ் பன்சால் கூறுகையில், “அலிகர் கல்லூரி மாணவர்கள் ஊர்வலத்தில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பப்பட்டது துரதிருஷ்டவசமானது. இதுதொடர்பான சில வீடியோக்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் சிலர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வர் மீதும், கல்லூரி மேலாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.