வேலூர் மாவட்டம் பாலாற்றங்கரையில் 25 ஏக்கரில் 7000 மரங்களை நட்டு குருங்காடு வளர்த்து வரும் இளைஞருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சிறந்த இளைஞருக்கான விருதை வழங்கினார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த உள்ளி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஸ்ரீகாந்த். இவருக்கு வயது 33. பி.சி.ஏ பட்டப்படிப்பு முடித்தவுடன் இவர் சென்னையில் சினிமா இயக்குனராகும் கனவுடன் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார்.
இதனிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு குடும்ப சூழ்நிலை காரணமாக ஸ்ரீகாந்த் சொந்த ஊருக்கு திரும்பினார். அங்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றங்கரையில் இருந்த வனப்பகுதி சில சமூக விரோதிகள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களால் அழிக்கப்பட்டு இருந்தது. அதை மீண்டும் உருவாக்கும் கனவோடு முதலில் சாலை ஓரங்களில் மரங்களை வைத்த ஸ்ரீகாந்த் பின்பு மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசின் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி சுமார் 7000 மரக்கன்றுகளை நட்டு அங்கு குருங்காடு வளர்த்து வருகிறார்.
இந்த செயலை பாராட்டும் விதமாக கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற 76 ஆவது சுதந்திர தின விழாவில் தமிழகத்தில் சிறந்த இளைஞருக்கான விருதை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஸ்ரீகாந்துக்கு வழங்கினார். மேலும் ஒரு லட்ச ரூபாய் பரிசையும் அவருக்கு வழங்கி கௌரவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் குக்கிராமத்தில் தான் செய்த இந்த சேவையை பாராட்டி தமிழக அரசு தனக்கு விருது வழங்கியது மகிழ்ச்சியாக உள்ளதாகவும், இதற்கு உறுதுணையாக இருந்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பல்லாயிரம் மரங்களை வளர்ப்பதே தனது நோக்கம் என்றும் அதற்கு தமிழக அரசு வழங்கிய விருது பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.