கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா குடகில் மழை வெள்ள சேதங்களை பார்வையிடச் சென்றார். அப்போது பா.ஜ.க-வினரும், இந்து அமைப்பினரும் சித்தராமையா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அவரை திரும்பிச் செல்லும்படி வலியுறுத்தியதுடன் சித்தராமையா கார்மீது முட்டையை வீசி, சாவர்க்கர் படத்தையும் காருக்குள் வீசியதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தச் தொடர்பாகப் பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, “சட்டத்தை கையில் எடுப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது. காவல்துறைக்கு இது தொடர்பாக தகவல் கொடுத்துள்ளேன். சித்தராமையாவுக்கு போதிய பாதுகாப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சித்தராமையா, “இவர்கள் காந்தியைக் கொன்றார்கள், என்னைக் காப்பாற்றுவார்களா?.. காந்தியை கோட்சே சுட்டார். ஆனால் பாஜக-வினர் அவர் புகைப்படத்தை வணங்குகிறார்கள். சாவர்க்கரின் போஸ்டர்களை ஒட்டிப் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்டவரை வீர சாவர்க்கர் என்று அழைக்கிறார்கள். எனக்கு சாவர்க்கர்மீது தனிப்பட்ட பகையோ கோபமோ இல்லை” என்றார்.