வெள்ளப்பேரிடர் என்றாலே அது மக்களுக்கு பெரும் அவதியாகவே அனைத்து காலகட்டங்களிலும் விளங்குகிறது, இதனால் ஏற்ப்படும் பொருளாதார மற்றும் உயிர் சேதங்களால் மக்கள் பெரிதும் பாதிக்கபடுகின்றனர்.
இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் சில தினங்களாக கடும் வெள்ளம் ஏற்ப்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் ஒடிசாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்தின் பத்து மாவட்டங்களில் 4.67 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைப் படை தெரிவித்துள்ளது. 1,757 கிராமங்கள் இதனால் நீரில் மூழ்கியுள்ளன.
இதுவரை சுமார் 60,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் மேலும் பலரை வெளியேற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். மகாநதியில் உள்ள ஹிராகுட் அணையின் உயரம் 630 அடியாக உள்ள நிலையில் அதன் நீர்மட்டம் 626.47 அடியை இதுவரை எட்டியுள்ளது.
அணையின் நீர்வரத்து வினாடிக்கு 6.24 லட்சம் கனஅடியாக உள்ள நிலையில் வினாடிக்கு 6.81 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் மகாநதியில் முண்டலி தடுப்பணைக்கு அருகில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் புரி, ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, குர்தா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா பகுதியில் நிலைமை மோசமடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையின்படி, 425 கிராமங்களைச் சேர்ந்த 2.5 லட்சம் மக்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பல்பூர், சுபர்னாபூர், பௌத், கட்டாக், குர்தா, ஜகத்சிங்பூர், கேந்திரபாரா மற்றும் பூரி ஆகிய இடங்களில் உள்ள பல பண்ணைகளும் நீரில் மூழ்கியுள்ளன. கோத்ரா மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய மக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மைக் குழு தெரிவித்துள்ளது.
அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை மூடவும், ஆபத்து பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. வெள்ளத்தால் பல சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளன.
ஒடிசவில் மொத்தமுள்ள 30 மாவட்டங்களில், சுமார் 20 மாவட்டங்கள் இன்று முதல் கனமழையை எதிர்கொள்ளும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. நாளை 17 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்றும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒடிசவில் ஏற்ப்பட்டுள்ள இந்த கனமழை மக்களை கடும் அவதிக்கு உள்ளாக்கியுள்ளது.