காவிரி உபரி நீரை நீரேற்று மூலம் கொண்டு வந்து மாவட்ட பாசனத்திற்கு வழங்கி தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரிகளையும் நிரப்ப வேண்டும் என்று தருமபுரி மாவட்ட விவசாயிகள் பல ஆண்டுகளாக வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒகேனக்கல் உபரி நீரை மாவட்ட பாசனத்திற்கு வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் இன்று முதல் 3 நாட்களுக்கு தருமபுரி மாவட்டத்தில் பிரசார நடைபயணம் மேற்கொள்கிறார்.
இதுகுறித்து பாமக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தருமபுரி மாவட்டத்தின் மேற்கு எல்லையில் காவிரி நதி ஓடுகிறது. வடக்கு எல்லையில் தென்பெண்ணை ஓடுகிறது. இருப்பினும் தருமபுரி மாவட்டத்தின் பெரும்பகுதி விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளன. இதற்குத் தீர்வு ஏற்படுத்தும் வகையிலும், மாவட்ட விவசாயத்தை மேம்படுத்தவும் ஒகேனக்கல் உபரி நீரை நீரேற்றும் திட்டம் மூலம் தருமபுரி மாவட்ட நீர்நிலைகளில் நிறைத்து பாசனத்திற்கு வழங்க வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று பாமக தலைவர் அன்புமணி தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் பிரசார நடைபயணத்தைத் தொடங்குகிறார். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தருமபுரி மாவட்டத்தின் முக்கிய கிராமங்கள் வழியாக இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட உள்ளது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- அணைப் பாதுகாப்பு சட்டம் – அணைகள் மீதான உரிமையை தமிழ்நாடு அரசு இழக்கிறதா?
- காவிரியில் முன்கூட்டியே நீர் திறப்பதால் விவசாயிகளுக்கு என்ன பயன்?
- தென் மேற்கு பருவமழை: தமிழக ஆறுகளில் வெள்ளம் – கள நிலவரம்
பாசன வசதி கிடையாது
தருமபுரி மாவட்ட எல்லையில் காவிரி நீர் பாய்ந்தாலும், அதன் நிலவியல் அமைப்பு காரணமாகத் தங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் காவிரியின் மூலம் தாங்கள் பயனடைய, காவிரி உபரி நீர் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்த வேண்டும் என்று தருமபுரி விவசாயிகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றன. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக ஒகேனக்கல் அருகே 1.2 லட்சம் கன அடி வீதம் நீர்வரத்து அதிகரித்ததால், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
பருவமழையின்போது காவிரியில் வரும் உபரி நீரை திருப்பிவிடுவதன் மூலம் விவசாயம் மட்டுமின்றி, கிராமப்புற பொருளாதாரம் மேம்பட்டு தருமபுரியின் வளர்ச்சிக்கு உதவும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
இந்த பிரச்னை குறித்து பேசிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர், வழக்கறிஞர் ஈசன், “தரும்புரி மாவட்டத்தின் எல்லையில், நிலவியல்ரீதியாக மாவட்ட அமைவிடத்தைவிட பள்ளத்தாக்கில் காவிரி ஓடுகிறது. ஆரம்பக் காலத்தில் இருந்தே காவிரி நீரை பயன்படுத்துவதற்கான பாசன வசதியோ கால்வாயோ கிடையாது. ஒகேனக்கல்லுக்கு மேல் ஒரு தருப்பணை கட்டி நீரேற்றம் செய்ய முடியும்.
அதன்மூலம், காவிரியில் உபரி நீர் போகும்போது மாவட்டத்திலுள்ள நீர்நிலைகளை நிரப்ப வேண்டும் என்று நீண்டகாலமாக மாவட்ட விவசாயிகளும் மக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். தேர்தல் வரும்போதும் அரசியல் கட்சிகள் அதை பிரதான கோரிக்கையாக வைக்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு முறையும் அமல்படுத்தப்படாமல் கோரிக்கையாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது,” என்றார்.
தருமபுரி மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் தென்பெண்ணை ஆறு ஓடுகிறது. அதற்கு, “ஈச்சம்படி அருகே தடுப்பணை கட்டி, அரூர், பாப்பிரெட்டிபட்டி, மொரப்பூர் போன்ற பகுதிகளில் இருக்கக்கூடிய சுமார் 160 குளங்களை நிரப்புவதற்காக ஒரு திட்டம் வகுத்து, அதற்கு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதியும் ஒதுக்கி விட்டார். அது குறித்த அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால், இன்று வரை அந்தத் திட்டம் நிறைவேற்றப்படவில்லை,” என்று கூறுகிறார் ஈசன்.
“தருமபுரி மிகவும் வறட்சியான பகுதி. பென்னாகரம், நல்லம்பள்ளி ஆகியவற்றில் நிலத்தடி நீர் பற்றாக்குறை, போதிய மழைப்பொழிவு இல்லாமையால் குடிநீரே பிரச்னையாக உள்ளது. அங்கிருக்கும் மக்கள் சிறுதானிய வேளாண்மையில் ஈடுபடுகிறார்கள். இறுதிபடுத்தப்பட்ட திட்டத்தை அமல்படுத்தினால், இப்பகுதி மக்களால் சரியான வகையில் வேளாண்மையில் ஈடுபட முடியும். குடிநீரும் நல்ல வகையில் கிடைக்கும்,” என்கிறார் ஈசன்.
கால்நடைகளுக்கே காசு கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த உதயகுமார் 23 ஆண்டுகளாக வேளாண்மை செய்து வருகிறார். தனது கால்நடைகளுக்குத் தேவைப்படும் தண்ணீருக்குக் கூட லாரியில் வாங்கித் தான் பயன்படுத்துகிறார். ஒரு லாரி தண்ணீர் வாங்கினால் அதற்கு 4,500 ரூபாய் செலவாகும். அதை வைத்து அவரிடமிருக்கும் 10 மாடுகளுக்கும் குடும்ப தேவைகளுக்கும் சேர்த்து 10 நாட்களுக்கும் மேல் அந்தத் தண்ணீரைப் பயன்படுத்த முடியாது.
மாவட்டம் முழுக்க ஆழ்துளை கிணறு மூலம் சராசரியாக 1700 அடி வரை தண்ணீருக்காக போர் போடப்பட்டுள்ளதாகவும் இதற்காக விவசாயிகள் பல லட்சம் செலவு செய்துள்ளதாகவும் கூறுகிறார் உதயகுமார்.
அவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, “மாவட்டத்தின் நிலத்தடி நீர் முழுவதுமாகத் தீர்ந்துவிட்டது. மழைப்பொழிவும் மிகக் குறைந்துவிட்டது. காவிரி, தென்பெண்ணை ஆறு இரண்டு நதிகள் எங்கள் மாவட்டத்தின் இருபுறமும் ஓடுகிறது. ஆனால், அதிலிருந்து எங்கள் பகுதிக்கு நீர் கிடைப்பதில்லை.
அவற்றிலிருந்து எங்களுக்கு நீரேற்றம் கிடைப்பது, சிறுதானியம், காய்கறி விவசாயத்தில் பெருவாரியாக ஈடுபட்டிருக்கும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பெரும் பலன் அளிக்கும்.
ஆனால், விவசாயத் தொழில் என்றாலே குறைவாக நினைக்கும் நிலைக்கு இங்கு சென்றுவிட்டது. வேளாண்மை செய்வதை விட வேறு தொழிலுக்குச் செல்வது மேல் என்று நினைக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.
காவிரி உபரி நீர் தருமபுரியை அடையும் வகையில், காமராஜர் ஆட்சிக் காலத்தில் ராசிமணல் பகுதியில் 1962ஆம் ஆண்டில் ஒரு தடுப்பணைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு அது குறித்து யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தண்ணீரை நீரேற்றம் செய்து கொண்டு வந்தாலே நன்மை கிடைக்கும். விவசாய வாழ்வாதாரம் முன்னேறும்.
அரூர், மொரப்பூர் போன்ற பகுதிகளில் மாடு, கன்றுகளுக்கு தேவையான தண்ணீரைக்கூட காசு கொடுத்து தான் வாங்குகிறார்கள். அரசும் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால், இன்னமும் நடைமுறைப்படுத்தவில்லை,” என்று கூறினார்.
- ஐந்தாயிரம் மீனவர்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கும் கொற்றலை ஆறு – புகைப்படத் தொகுப்பு
- தமிழக, கேரள எல்லையில் சுகவீனத்துடன் ஒற்றை யானை – வனத்துறைகள் குழம்புவது ஏன்?
- சென்னை, காஞ்சிபுரத்தில் 21,498 நீர்நிலை ஆக்கிரமிப்புகள்: ஆர்டிஐ பதில்
ராசிமணல் அணை திட்டம்
இந்தப் பிரச்னைக்கு ராசி மணலில் அணை கட்டுவது தான் தீர்வாக அமையும் என்று காவிரி விவசாய சங்கங்களின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகிறார்.
பிபிசி தமிழிடம் அவர் பேசியபோது, “காவிரியில் போகும் உபரி நீர் மேட்டூர் அணையில் நிரம்பிய பிறகு, சுமார் 64 டிஎம்சி தண்ணீரைத் தேக்குவதற்கான இடம் ராசிமணல். தருமபுரிக்கான நீரேற்றத்தை மேற்கொள்ள ஏற்ற இடம் ராசிமணல் தான். மேகேதாட்டு அணை ராசிமணலுக்கு மேலே உள்ளது. அதன் இடது கரை கிருஷ்ணகிரி மாவட்ட வன எல்லையில் தமிழ்நாட்டில் உள்ளது. இதில் தொட்டியாலா வழியாக நீரேற்றம் திட்டத்தின் மூலம் தருமபுரிக்கான பாசனத்திற்குப் பயன்படுத்தலாம். இந்தத் திட்டம் நிறைவேற வேண்டுமெனில், மலைக்கு மேலே ராசிமணலில் அணை கட்டினால் தான் நீரேற்றம் செய்ய முடியும், இந்தத் திட்டம் பலனளிக்கும்.
அன்புமணி முன்னெடுத்துள்ள இந்தப் பாதையாத்திரையில் கூறும் பிரச்னைக்குத் தீர்வு ராசிமணலில் அணை கட்டுவது தான். அதற்கு பகுதி பகுதியாக ஒத்த கருத்தோடு போராட அனைவரும் முன்வர வேண்டும். அதேபோல, தென்பெண்ணையில் உபரிநீர் போகிறது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது, புதிய நீர்பாசனத் திட்டங்களைத் தயாரிக்க பொறியாளர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
அந்த குழுவைச் செயல்பட இப்போதைய அரசு அனுமதிக்கவில்லை. மாற்றுக் குழுவையும் இதுவரை அமைக்கவில்லை. ஏற்கெனவே அமைக்கப்பட்ட குழு நடைமுறையில் உள்ளதா என்பதையும் தெளிவுபடுத்தவில்லை. இது தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவு,” என்று தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்