ஒரு மாதமாக தூக்கமில்லை… மன உளைச்சலால் 16-வது மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்த முதியவர்!

நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அறிவியல் தொழில்நுட்பங்கள் இன்று பெரிதும் வளர்ந்துவிட்ட இந்த நவீன காலத்தில் பகலென்று, இரவென்று பாராமல் பலரும் வேலை செய்துவருகின்றனர். இதனால் பலரும் இரவில் வேலை பார்ப்பது, பகலில் உறங்குவது என தங்களின் வாழ்க்கை முறையையே மாற்றிவருகின்றனர். இன்னும் பலர் இதில் உறக்கமில்லாமல் பெரும் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். எப்படி மனிதனின் பசிக்கு உணவு ஒரு தவிர்க்க முடியாத தேவையாக இருக்கிறதோ, அதுபோல உடலின் ஓய்வுக்கு உறக்கமென்பதும் தவிர்க்க முடியாத ஒன்றே. இது முறையாக இல்லாதபோது மனிதன், உளவியல் ரீதியாக மன அழுத்தத்துக்கு ஆளாகி சில சமயங்களில் விபரீத முடிவுகளும் எடுப்பதுண்டு.

மன அழுத்தம்

அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபாத்தில், தூக்கமின்மையால் மன உளைச்சலுக்கு ஆளான முதியவரொருவர், 16-வது மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் இறந்த வினோத் சங்கர் என அடையாளம் காணப்பட்ட இவர், எம்.டி.என்.எல் நிறுவனத்தில் மூத்த மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அதிகாரியென தெரியவந்திருக்கிறது.

தற்கொலை

65 வயதான வினோத் சங்கர், காஜியாபாத் நகரில் கிராசிங் ரிபப்ளிக்கில் தன் குடும்பத்துடன் வசித்திருக்கிறார். இந்த நிலையில் வினோத் சங்கர் கடந்த புதன்கிழமை இரவன்று, 3 மணியளவில் தான் வசித்த அடுக்குமாடிக் குடியிருப்பின் 16-வது மாடியிலிருந்து கீழே குதித்திருக்கிறார். இதில் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் வினோத் சங்கர் இறந்துகிடப்பதைப் பார்த்து உடனடியாக போலீஸை அழைத்திருக்கின்றனர். பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து வினோத் சங்கரின் மகனிடம் போலீஸ் விசாரணை நடத்தியதில், “கடந்த ஒருமாத காலமாகவே சரியான தூக்கமில்லாததால் அவர் பெரும் மன உளைச்சலில் இருந்தார். மேலும், இரவில் பால்கனியில் நடந்துகொண்டிருந்ததால் அவரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டிருந்தது” என அவர் மகன் தெரிவித்திருக்கிறார்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.