கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான ஜூனியர் தடகள போட்டி நேற்று 3-வது நாளாக நடந்தது. இதில் கலந்து கொண்ட வீரர்-வீராங்கனைகள் புதிய சாதனைகளை படைத்தனர். அதன்படி குண்டு எறிதலில் 16 வயது பிரிவில் 13.46 மீட்டர் முந்தைய சாதனையாக இருந்தது. இதனை வீரர் லானிஸ் ஜோஸ்வா 14.74 மீட்டர் குண்டு எறிந்து புதிய சாதனை படைத்தார்.
அதேபோல ஈட்டி எறிதலில் முந்தைய சாதனையான 51.67 மீட்டர் என்பதை ஸ்ரீபாலாஜி 51.82 மீட்டர் எனவும், 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் முந்தைய சாதனையான 12:44 வினாடி என்பதை அபினயா 12:38 எனவும் மாற்றி புதிய சாதனை படைத்தனர். இதேபோல் 5,000 மீட்டர் ஓட்டம், வட்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், தடை தாண்டும் ஓட்டம் போட்டியிலும் வீரர்-வீராங்கனைகள் புதிய சாதனை படைத்தனர். இன்று (சனிக்கிழமை) இறுதி நாள் போட்டிகள் நடக்கிறது.