
லூசிபருக்கு மூன்றாம் பாகமும் உண்டு ; கதாசிரியர் தகவல்
கடந்த 2019ம் ஆண்டு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் லூசிபர். நடிகர் பிரித்விராஜ் இந்த படத்தின் மூலம் முதன்முதலாக இயக்குனராகவும் அடி எடுத்து வைத்து அதிலும் வெற்றிக்கொடி நாட்டினார். இதைத்தொடர்ந்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் என்கிற பெயரில் மீண்டும் மோகன்லாலை வைத்து படம் இயக்க போவதாக இரண்டு வருடத்திற்கு முன்பு அறிவித்தார் பிரித்விராஜ். இதன் படப்பிடிப்பு இந்த வருடம் துவங்க இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று மலையாள சிறப்பு நாளான சிங்கம் மாதம் முதல் தேதியை முன்னிட்டு மோகன்லால், பிரித்விராஜ், லூசிபர் கதாசிரியர் முரளி கோபி மற்றும் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் ஆகிய நால்வரும் ஒன்றுகூடி லூசிபர் இரண்டாம் பாகம் குறித்த டிஸ்கசன் ஒன்றை நடத்தியுள்ளனர். நால்வரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர்.
இந்த இரண்டாம் பாகம் குறித்து கதாசிரியர் முரளிகோபி கூறும்போது, “இது லூசிபர் படத்தின் சீக்வல் அல்ல.. மூன்று பாகங்களைக் கொண்ட லூசிபர் படத்தின் இரண்டாவது பாகமாக இது வெளியாகிறது.. மூன்றாம் பாகத்துடன் இது முடியும்”. என்று கூறியுள்ளார். இதன் மூலம் இந்த படத்திற்கு மூன்றாம் பாகமும் இருக்கிறது என்பதை தற்போது உறுதிப்படுத்தியுள்ளார் கதாசிரியர் முரளி கோபி.