டாக்கா : ”வங்க தேசத்தில் எனக்கு உள்ள எல்லா உரிமைகளும் ஹிந்து சமூகத்தினருக்கும் உள்ளன,” என அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார். நம் அண்டை நாடான வங்க தேசத்தில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பிரதமர் ஷேக் ஹசீனா, ஹிந்து சமூக தலைவர்களுடன் நேற்று முன்தினம் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
வங்க தேசத்தில் வாழும் மற்ற மதங்களைச் சார்ந்தவர்கள் தங்களை சிறுபான்மையினராக நினைக்க வேண்டாம். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள வங்கதேசத்தில் மற்ற சமூகத்தினருக்கும் அனைத்து சம உரிமைகளும் உண்டு.
எனவே, மற்ற மதத்தினர் தயவு செய்து உங்களை தாழ்த்திக் கொள்ளாதீர்கள். நீங்கள் இந்த நாட்டில் பிறந்தவர்கள். நீங்கள் இந்நாட்டின் குடிமக்கள். விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம், வங்கதேசத்தில் ஹிந்து சமூகத்திற்கு எந்த உரிமையும் இல்லை என பிரசாரம் செய்யப்படுகிறது. ஆனால், அதில் உண்மையில்லை.
துர்கா பூஜை விழாக்களுக்காக, மேற்கு வங்கத்தில் உள்ள மண்டபங்களின் எண்ணிக்கையை விட, வங்க தேசத்தில் அதிக எண்ணிக்கையிலான மண்படபங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 2022ல் வங்க தேசத்தில் ஹிந்து சமூகம். மொத்த மக்கள் தொகையில் 8 சதவீதத்துடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement