இஸ்லாமாபாத்:”ஜம்மு – காஷ்மீர் பிரச்னையில், சமத்துவம், நீதி மற்றும் பரஸ்பர மரியாதை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில், அமைதியான உறவுக்கு வழிவகுக்க வேண்டும்,” என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, 2019ல் நீக்கப்பட்டது. மாநிலம், ஜம்மு – காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. மத்திய அரசு இதை அறிவித்த பின் பாகிஸ்தானுடனான உறவு மேலும் மோசமடைந்தது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கான ஆஸ்திரேலிய துாதரக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள நீல் ஹாக்கின்ஸ் மற்றும் அதிகாரிகளுடனான கருத்தரங்கு, பாகிஸ்தானில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியதாவது: சமத்துவம், நீதி மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவுடன் அமைதியான உறவை பாகிஸ்தான் விரும்புகிறது.
இந்த சூழலில், ஜம்மு- – காஷ்மீர் பிரச்னைக்கு, நியாயமான மற்றும் அமைதியான தீர்வை அங்குள்ள மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப முடிவெடுக்க வேண்டும். தெற்காசியாவில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலவ, சர்வதேச சமூகம் இந்த விஷயத்தில் நல்ல முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
‘ஜம்மு – காஷ்மீர், இந்தியாவுக்கு உட்பட்ட பகுதி. இந்த யதார்த்தத்தை பாக்., ஏற்றுக்கொள்ள வேண்டும். ‘இங்கு, பயங்கரவாதம் மற்றும் விரோதம் இல்லாத சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு பாக்.,கிற்கு உள்ளது’ என, மத்திய அரசு பல முறை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement