கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களில் ஒருவராக வலம் வருபவர்
. கூட்டுறவுத் துறை அமைச்சராக பதவி வகிக்கும் அவருக்கு கடந்த ஜூலை மாதம் மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் மருத்துவர்கள் அறிவுறுத்தியபடி ஓய்வு மேற்கொள்ளாமல் சென்னை சென்றார். அங்கு அமலாக்கத்துறை விசாரணைக்குச் சென்றார், செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்விலும் கலந்து கொண்டார். அமைச்சரவை கூட்டத்திலும் கலந்துகொண்டார். தொடர்ந்து தனது பணிகளில் தொய்வு ஏற்படாமல் பார்த்துக் கொண்டார் ஐ.பெரியசாமி.
ஆனால் சில தினங்களுக்கு முன்னர் அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் அதிகமானதால் அவர் மதுரையில் உள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதை தொடர்ந்து அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதனால் தற்போது அவர் உடல் நலம் குணமடைந்து வருகிறார்.
இந்த தகவல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோருக்கு தெரிய வந்த நிலையில் உடனடியாக மருத்துவமனையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்து தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் பலரும் மருத்துவமனை முன்பாக கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. குணமடைந்து வீடு திரும்பியதும் அங்கு வந்து அமைச்சரிடம் நலம் விசாரிக்குமாறு கூறி அனுப்பியுள்ளனர்.