‘ரூ.3 லட்சம் வரையிலான விவசாயக் கடன்களுக்கு, 1.5% வட்டி மானியம் வழங்கப்படும்’ என அறிவித்திருக்கிறது. இதற்காக ரூ.34,856 கோடியை ஒதுக்கீடு செய்ய முடிவெடுத்திருக்கிறது மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு. பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், கணினிமயமாக்கப்பட்ட தொடக்க வேளாண் சங்கங்கள் ஆகியவற்றில் பெறப்படும் விவசாயக் கடன்களுக்கு மட்டுமே இந்த வட்டி மானியம்.
இது, உள்ளபடியே வரவேற்கத்தக்க ஒன்றுதான். விவசாய விளைபொருள்களுக் கான விலை நிலையற்றதாக இருக்கும் சூழலில், விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு உத்தரவாதம் இல்லாத நிலையே நீடிக்கிறது. இந்நிலையில், வாங்கிய கடனுக்கும் வட்டி கட்ட முடியாத கஷ்டத்தில்தான் விவசாயிகள் இருக்கிறார்கள். அந்தக் கஷ்டத்தைக் கொஞ்சம் குறைக்க இந்த வட்டி மானியம் நிச்சயம் பயன்படும்.
இது ஒருபுறமிருக்க, இந்த விவசாயக் கடன், மானியம் எல்லாம் தகுதியான விவசாயிகளுக்குதான் சென்று சேர்கிறதா என்பது, நீண்ட காலமாக கேள்வி யாகவே நீடிக்கிறது. காங்கிரஸ் காலத்திலும் இப்படி கடன் மானியம் இருந்தது. அந்தக் காலம்தொட்டே ‘விவசாயி’ என்று சொல்லிக்கொண்டு கடன் வாங்கும் போலி விவசாயிகள் பலரும், அந்தப் பணத்தை வட்டிக்கு விட்டு 30% அளவுக்கு வருமானம் பார்ப்பதைத்தான் வாடிக்கையாக வைத்துள்ளனர். ஒரு வீட்டுக்கு மூன்று, நான்கு பேர் வரை இப்படி ‘விவசாயி’ வேடமிட்டு, வட்டி பிசினஸ் நடத்துவதை ஒரு தொழிலாகவே செய்து வருகின்றனர்.
விவசாயம் என்பது மக்கள் உயிர் வாழ்வதற்கு அடிப்படையான தொழில். அதற்கு மாற்று கிடையாது என்பதற்காகத்தான் முன்னுரிமை அடிப்படையில் கடன், மானியங்கள் தரப்படுகின்றன. ஆனால், தகுதி வாய்ந்த விவசாயிகளைவிட, கட்சிக்காரர்கள், கமிஷன் பேர்வழிகள், வட்டிக்கடை முதலாளிகள் என்றொரு பெரும்கூட்டம்தான், இதனால் பெரும்பாலும் லாபம் அடைந்துகொண்டிருக்கிறது!
ஆக, மானியங்களைக் கொடுப்பதற்கு முன், உண்மையான விவசாயிகளைக் கண்டறிவது முக்கியம். மானியத்துடன்கூடிய விவசாயக் கடன், தகுதி வாய்ந்த விவசாயிகளுக்குத்தான் சென்று சேர்கிறதா, அவர்கள் விவசாயத் தேவைக்குத்தான் அதைப் பயன்படுத்துகிறார்களா, கடந்த காலங்களில் வாங்கிய இதுபோன்ற கடன்கள் மூலம் அவர்களுடைய விவசாயத் தொழில் எந்த அளவு வளர்ச்சி கண்டிருக்கிறது என்பதையெல்லாம் அலசி ஆராய்ந்துதான், கடன் மற்றும் மானியத்தைத் தர வேண்டும். ‘இதெல்லாம் நடைமுறையில் சாத்தியப்படுமா?’ என்று கேட்டால், வங்கிக் கணக்கு, ஆதார் என்று அனைத்தையும் இணைத்து வைத்திருக்கும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நிச்சயம் சாத்தியம்தான்!
‘டிஜிட்டல் இந்தியா’ என்று விளம்பரம் செய்தால் மட்டும் போதாது, அதை நிஜத்திலும் 100% சாத்தியப்படுத்திக் காட்டியாக வேண்டும். உண்மையான விவசாயிகளைக் கண்டறியும் விஷயத்திலும் அது தொடர வேண்டும்!
– ஆசிரியர்