உடலுக்கு ஆரோக்கியம் கொடுக்கும் உளுந்து சட்னி எப்படி செய்வது என்பதை தெரிந்திகொள்வோம்.
தேவையான பொருட்கள்
உளுந்தம் பருப்பு – 4 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 7, சீரகம் – ஒரு ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், புளி – சிறு நெல்லிக்காய் அளவு, எண்ணெய் – தேவையான அளவு, சின்ன வெங்காயம் – 15, பூண்டு – ஐந்து பல், தக்காளி – ஒன்று, உப்பு – தேவையான அளவு.
தாளிக்க: எண்ணெய் – 2 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து, கடலை பருப்பு – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
செய்முறை
உளுந்து சட்னி செய்வதற்கு முதலில் பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைக்கவும். தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய்ந்ததும் 4 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பை எடுத்துக் கொள்ளுங்கள்.
உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் வர மிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் மிளகு, சீரகம் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்த பின்பு, ஒரு சிறிய அளவிற்கு புளியை பிய்த்து போட்டு வதக்கவும். ஒரு நிமிடம் நன்கு வதக்கிய பின்பு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள்.
இந்த பொருட்கள் எல்லாம் ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதே வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் பொடி பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கி விடுங்கள். வெங்காயம் லேசாக வதங்கி வரும் போது பூண்டு பற்களை நறுக்கி சேருங்கள். அதனுடன் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளையும் சேர்த்து மசிய வதக்கி விட வேண்டும். பின்னர் இவற்றையும் அப்படியே ஆற விட்டு விடுங்கள்.
மிக்ஸி ஜாரை இயக்கி கொரகொரவென்று முதலில் போட்ட பொருட்களை மட்டும் அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஆற வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பூண்டையும் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு ஒரு முறை மிக்ஸியை இயக்கி நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். இந்த உளுந்து சட்னி ரொம்பவும் நைசாக இல்லாமல் சற்று கொரகொரவென்று அரைத்தால் ரொம்பவே சுவையாக இருக்கும். இப்போது இதற்கு ஒரு சிறு தாளிப்பு ஒன்று கொடுக்க வேண்டும்.