அ.தி.மு.க பொதுக்குழு தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சியைத் தரவே சோகத்தில் ஆழ்ந்துபோய் இருக்கிறார். அடுத்து என்ன நடக்கும் என்றே தெரியாத சூழலில் அந்தக் கட்சியின் விவகாரம் சென்றுகொண்டிருக்கிறது. இந்தச் சூழலில், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்திருக்கிறார். இதே போல், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த தாக்கல் செய்யப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவில் தன் தரப்பு வாதத்தைக் கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் கேவியட் தாக்கல்செய்துள்ளார்.
முன்னதாக, ஓ.பன்னீர் செல்வம், “மனக்கசப்பை மறந்து அனைவரும் ஒன்றிணைவோம்” என வெளிப்படையாகவே அழைப்பு விடுத்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்தை ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் வரவேற்கச் செய்வார்கள்” என்று வரவேற்றுப் பதிவிட்டார். இதனால், ஓ.பன்னீர்செல்வத்தை டிடிவி.தினகரன் ஆதரிப்பது இதன் மூலம் தெரியவருகிறது.
இதே போல், அ.தி.மு.க-வைக் கைப்பற்ற சசிகலா சட்டப்போராட்டங்களை நடத்தி வந்தாலும், “அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம்” என்ற நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருக்கிறார். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தின் அழைப்பை எடப்பாடி மட்டுமே புறக்கணித்து வருகிறார். அவர் ஆதரவாளர்களில்கூட சிலர் மறைமுகமாக சசிகலாவையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. பன்னீர்செல்வத்தின் அழைப்பின் மூலம் மூன்றாக உடைந்து கிடக்கும் அ.தி.மு.க கூடிய விரைவில் ஒன்றிணையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
பன்னீர்செல்வத்தின் அழைப்பு குறித்து, அ.ம.மு.க மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். “ஓ.பி.எஸ் அழைப்புக்குத் தலைவர் ட்விட்டர் மூலம் நேரடியாகப் பதிலளித்துவிட்டார். தலைமை என்ன சொல்கிறதோ அதன்படிதான் நடப்போம். நாங்கள் ஒன்றிணைந்தாலும் எடப்பாடி வருவாரா என்பது சந்தேகம்தான். வலிமையான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க-வைக் கொண்டுவர ஒன்றிணைவது மட்டுமே சரியான ஒன்றாக இருக்கும். ஆனால், டிடிவி.தினகரன் தனியாக அ.ம.மு.க-வை ஆரம்பித்துச் செயல்பட்டு வருவதால் ஒருங்கிணைப்பு என்ற விஷயத்தில் தலைவரின் முடிவே இறுதியானது” என்றார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தியிடம் கேட்டபோது, “ஓ.பி.எஸ் அழைத்தும் எடப்பாடி வரவில்லை. எனவே, வரக்கூடிய காலங்களில் இரட்டை இலை முடக்கப்பட்டால் அதற்கு எடப்பாடிதான் முழு காரணமாக இருப்பார். இதே போல், நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி படுதோல்வியைச் சந்திக்கும் நிலை வந்தாலும் அதற்கும் அவர்தான் காரணமாக இருப்பார். ஓ.பி.எஸ் அழைப்பை எடப்பாடி புறக்கணித்து, யாருடைய நலனுக்காக அவர் இப்படிச் செய்கிறார் என்று வெகு விரைவில் வெளியே வரும். சர்வாதிகார போக்குடன் அவர் செயல்படுகிறார். இந்த கட்சியை உடைக்க எடப்பாடியை ஒரு கருவியாகவே பயன்படுத்தி வருகிறார்கள். அது யாரென்று கூடிய விரைவில் வெளியே தெரியும்” என்றார்.