புதுடெல்லி: ராஜஸ்தானின் கராலி மாவட்டத்தில் உள்ள எஸ்பிஐ மெகந்திப்பூர் கிளையில் ரூ.11 கோடி மதிப்பிலான நாணயங்கள் மாயமானதாக கடந்தாண்டு ஆகஸ்ட்16-ம் தேதி எப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டது.
இது தொடர்பாக நடந்த ஆரம்ப கட்ட விசாரணையில், பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது தெரிந்தது. பின்னர் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக டெல்லி, ஜெய்ப்பூர் உட்பட 25 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். வங்கி மேலாளர், பாதுகாப்பு அதிகாரி, நிதி அதிகாரிகள், வங்கி முன்னாள் அதிகாரிகள் 15 பேருக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இதற்கிடையில், வங்கியில் உள்ள ரூ.13.01 கோடி நாணயங்களை எண்ணும் பணியை அர்ப்பிட் குட்ஸ் கேரியர் என்றநிறுவனத்திடம் எஸ்பிஐ ஒப்படைத்துள்ளது. ஆனால், நாணயங்கள் எண்ணும் பணியை நிறுத்துமாறு, இப்பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ஆயுத கும்பல் ஒன்று மிரட்டல் விடுத்ததாக இந்நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த 6-ம் தேதி வரை, 2,350 மூட்டைகளில் இருந்த ரூ.1.39 கோடி மதிப்பிலான நாணயங்கள் எண்ணப்பட்டுள்ளன. சுமார் 600 முதல் 700 மூட்டை நாணயங்கள் இன்னும் எண்ணப்படாமல் உள்ளன. இதில் ரூ.60 லட்சம்மதிப்பிலான நாணயங்கள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.