நாகப்பட்டினம்: விவசாயத் துறைபோல மீன்வளத் துறையிலும் தமிழகம் புரட்சி செய்ய வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார்.
நாகை மாவட்டம் நாகூரில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில், பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, 215 இளங்கலை மீன் வள அறிவியல் மாணவர்கள், 55 இளநிலை தொழில்நுட்ப கல்வி மாணவர்கள், 25 முதுநிலை மீன்வள அறிவியல் மாணவர்கள், 12 முனைவர் பட்ட மாணவர்கள் உட்பட 339 பேருக்கு பட்டங்களை வழங்கிப் பேசியது:
பொருளாதாரத்தில் மீன்வளத்தின் பங்கு முக்கியமானதாக உள்ளது. விவசாயத்தில் எந்த அளவுக்கு புரட்சி செய்துள்ளோமோ, அதேபோல மீன் வளத்துறையிலும் தமிழகம் புரட்சி செய்ய வேண்டும். ஆந்திரா, மேற்குவங்கம் போன்ற பல மாநிலங்கள் மீன்வளத் துறையில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளன. அதேபோல நாமும் முன்னேற வேண்டும்.
2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற தமிழகத்தின் லட்சியத்தை அடைய வேண்டும். பொருளாதாரத்தில் ஒவ்வொரு துறையும் பங்களிக்கும்போதுதான் இது சாத்தியமாகும். இதில், மீன்வளமும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மணிப்பூர் இம்பால் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.அய்யப்பன், மீன்வள பல்கலை. துணைவேந்தர் ஜி.சுகுமார், பதிவாளர் ஏ.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.