சென்னை: இருதரப்பு மோதலில் நாட்டு வெடிகுண்டு வீச்சு, பீதியில் மக்கள்

சென்னை எம் ஜிஆர் நகரில் ஒரே பகுதியை சேர்ந்த இரு தரப்பினர் நண்பர்களாக இருந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலாஜி என்பவரது தரப்பைச் சேர்ந்த சுமார் 15 நபர்கள் அதிமுகவிலிருந்து விலகி திமுகவிற்கு சென்றுள்ளார்கள். அன்று முதலே இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது சிறு சிறு பிரச்சனைகள்  ஏற்பட்டு வந்தது. 

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்னை சத்யா நகரில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றுள்ளது.  அன்று ராஜா என்பவரது தரப்பைச் சேர்ந்த நபர்கள் எதிர் தரப்பான பாலாஜியின் சகோதரர் பாரத்  வீட்டின் அருகே மேளம் அடித்ததால்  பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 

இந்த பிரச்சனையின் தொடர்ச்சியாக நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் மேற்கண்ட சத்தியா நகர் 6 ஆவது தெருவில் உள்ள பாலாஜியின் வீட்டின் முன்பு வந்த ராஜா தரப்பைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் பாலாஜி தரப்பைச் சேர்ந்த மணி என்பவனிடம் பிரச்சனை செய்து கொலை செய்து விடுவதாக மிரட்டியதால் அருகில் இருந்த பாலாஜியின் பெற்றோர் அவர்களை தட்டி கேட்டதால் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. 

இதன் பிறகு இரு கோஷ்டிகளும் அவரவர் நண்பர்களுடன் இரவு சுமார் 11 மணியளவில் சத்தியா நகர் பகுதியில் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதலின் போது பாலாஜியின் சகோதரர் பரத் நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசி உள்ளார். இதில் இருவருக்கு காலில் சிறிய அளவில் காயம் ஏற்பட்டு கே கே நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் ஒருதரப்பை சார்ந்த பாலாஜி, ஜெனீஸ்வரன் மற்றும் கோபி ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் இருதரப்பையும் சேர்ந்த தலைமறைவான 15-க்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டு இருக்கும் பாலாஜி என்பவரின் தந்தை கோபால் CITU வின் விருகை பகுதி துணைத்தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே பகுதியை சேர்ந்த இரு கோஷ்டிகளுக்கு நடுவில் நடந்த இந்த மோதலும், அதில் நாட்டுக்குண்டு போன்ற அபாயகரமான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதும் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.