தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் அருகிலுள்ள தெற்கு குப்பனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் மனைவி அர்ச்சனா. இவர், வாய் பேச இயலாதவர். இவர்களுக்கு 5 வயதில் கார்த்திக் ராஜா, 3 வயதில் சுபாஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் வசிக்கும் ஓட்டு வீடு பழைய கட்டடம். சுவரில் ஆங்காங்கே துளைகள் காணப்படுகின்றன. இந்த நிலையில், அர்ச்சனா வீட்டின் சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
சமையலறைச் சுவரின் அருகில் இருந்த சிறிய துளையின் வழியே நல்ல பாம்பு ஒன்று வெளியே தலை தூக்கி நின்றிருக்கிறது. பாம்பை கவனிக்காமல் அர்ச்சனா சமையல் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது சமையலறைக்குள் வந்த சிறுவன் கார்த்திக்ராஜா, அந்தப் பாம்பு தன் அம்மாவைத் தீண்டிவிடக்கூடாது என்பதற்காக அதை விரட்ட முயற்சி செய்திருக்கிறான். அப்போது, நல்லபாம்பு அந்தச் சிறுவனைத் தீண்டிவிட்டது. அலறல் சதத்துடன் மயங்கி கீழே விழுந்த சிறுனைத் தூக்க முயன்றபோது அருகில் நல்லபாம்பு ஊர்ந்து சென்றதை தாய் அர்ச்சனா பார்த்திருக்கிறார்.
அதையடுத்து அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு, கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவனுக்கு முதலுவதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகக் கூறினர். “சுறுசுறுப்பா ஊரையே சுத்தி வருவான். படிப்புலயும் கெட்டிக்காரன். கேட்ட கேள்விக்கெல்லாம் கணீர் கணீர்னு பதில் சொல்லுவான் அந்தப் பய. எப்பவும் சிரிச்ச முகத்தோட இருப்பானே.
அம்மாவைக் காப்பாத்தப் போயி இப்படி பாம்பு கடிச்சு இறந்து போயிட்டான. பச்சப் புள்ளைகளை வச்சிருக்க. ஓட்டை விழுந்த வீட்டுல இருக்காதன்னு அர்ச்சனாகிட்ட எவ்வளவோ சொன்னோம் கேட்கல. ஓட்டைகளையாவது சிமெண்டால அடைச்சு வையும்மானு சொன்னோம். இப்போ பாம்பு தீண்டி பரிதாபமா அந்தப் புள்ள இறந்ந்துட்டானே” என ஊர் மக்கள் அழுது புலம்பி வருகிறார்கள். தாயைக் காப்பாற்ற முயன்ற சிறுவன் பாம்பு தீண்டி உயிரிழந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் ஆழ்ந்திருந்தது.