சென்னை கே.கே நகரில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த பாலாஜி, ஜானேஸ்வரன், ராஜா மற்றும் கேசவன் உட்பட 20 க்கும் மேற்பட்டோர் ஒரே பகுதியில் நண்பர்களாக இருந்து வந்திருக்கிறார்கள்.
இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலாஜி மற்றும் ஜானேஸ்வரன் உட்பட பலர் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு மாறியிருக்கிறார்கள். அன்று முதல் ஒரே பகுதியில் வசித்த நண்பர்கள் இரு கோஷ்டிகளாக பிரிந்து சிறு சிறு பிரச்னைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்னை சத்யா நகர் 2வது தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் பாரத் எதிர் கோஸ்டியின் வீட்டின் அருகில் நின்று மேளம் அடித்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நேற்று மாலை 7.30 மணி அளவில் ஜாஃபர்கான் பேட்டை சத்யா நகர் பகுதியில் பாலாஜி என்பவரது வீட்டின் முன்பு பிரகாஷ் என்பவர் மற்றொரு கோஷ்டியான மணி என்பவரிடம் தகராறில் ஈடுபட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டி பிரச்சனை செய்து இருக்கின்றனர்.
அப்போது பாலாஜி என்பவரின் பெற்றோர் இது தொடர்பாக கேட்ட போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு இரண்டு தரப்பினருக்கும் கோஷ்டி மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி தாக்கிக் கொண்டனர்.
இந்த நிலையில் பாலாஜி என்பவரின் சகோதரர் பரத் என்பவர் நாட்டு வெடிகுண்டு வீசியதால் அந்த பகுதி முழுவதிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் நாட்டு வெடிகுண்டு வீசியதால் இரண்டு நபருக்கு காலில் காயம் ஏற்பட்டு கே கே நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக எம்ஜிஆர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாஜி, ஜானேஸ்வரன், மற்றும் கோபி உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தகராறில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் வலை வீசி தேடி வருவதாகவும், தகராறு ஏற்பட்ட இடத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM