தமிழ் நூல் விவர அட்டவணைத் திட்டத்தை உயிர்ப்பித்து அதன்மூலம் தொடர்ந்து விவர அட்டவணைகளை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து தமிழ் மொழி வளர்ச்சிக்காகப் பல்வேறு பாராட்டத்தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழ் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கென்று தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டிய முக்கியமானதொரு நடவடிக்கை குறித்துத் தங்களது கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். அச்சுத் தொழில்நுட்பத்தின் பரவல் காரணமாக ஒவ்வொரு நாளும் தமிழில் ஏராளமான நூல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன அவற்றின் விவரங்களைத் தொகுத்து அட்டவணைப் படுத்துவது தமிழ் ஆய்வுகளை மேம்படுத்த உதவக்கூடிய ஒரு பணியாகும்.
தமிழில் வெளியான நூல்களைப் பொருள்வாரியாகப் பிரித்து அட்டவணைப்படுத்தும் முயற்சி 1961 ஆம் ஆண்டு துவங்கியது. வே.கண்ணையன் என்பாரை பொதுப் பதிப்பாசிரியராகக் கொண்டு முதல் தொகுதி வெளியானது. 1867 முதல் 1900 வரையில் வெளியான நூல்களின் விவரப் பட்டியல் ஐந்து பாகங்களாக வெளிவந்தன ;
அ.ச.ஞானசம்பந்தன் அவர்களை பொதுப் பதிப்பாசிரியராகக்கொண்டு இரண்டாம் தொகுதியின் முதல் பகுதி 1965 இல் வெளியானது. 1901 முதல் 1910 வரையிலான காலத்தில் வெளியான நூல்களின் பட்டியல் அதில் இடம்பெற்றது.1931 முதல் 35 ஆம் ஆண்டு வரை வெளியான நூல்களின் பட்டியல் ஏழாம் தொகுதி முதல் பகுதி என 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி இயக்கக வெளியீடாக பேராசிரியர் டாக்டர் மா. நன்னன் அவர்களை பொதுப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியானது. அதன்பின்னர் தமிழ் நூல் விவர அட்டவணைத் தொகுதிகள் தொடர்ந்து வெளிவந்தனவா எனத் தெரியவில்லை.
இவ்வாறு விவர அட்டவணை வெளியிடுவதால் ஏற்படும் பயன் யாது என்பதை 1961 இல் நிதி அமைச்சராகவும் கல்வி அமைச்சராகவும் இருந்த சி.சுப்பிரமணியம் தனது முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். “இந்த நூல் விவர அட்டவணை நான்கு பயன்களைச் செய்யும்: முதலாவது தமிழ் மொழியில் ஒரு நூற்றாண்டில் எத்துணை நூல்கள் வெளிவந்துள்ளன என்பதை அறிய இது ஒரு வாய்ப்பு; இரண்டாவது ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான விஷயங்கள் பலவற்றை இந்த அட்டவணை தருகிறது; மூன்றாவது 19 ஆம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய வரலாறு எழுதப்படுமானால் இந்த அட்டவணையின் பூரண பயனை அடைய முடியும்; நான்காவதாக இந்த ஒரு நூற்றாண்டில் தமிழ் மொழி, அதன் இலக்கியம், தமிழ் நூல்களுக்குப் பெயரிடும் விதம், தமிழ் நூல்களை அச்சிட்ட அச்சு எந்திர சாலைகள் ஆகியவற்றின் வளர்ச்சியை அறியவும் இந்த அட்டவணை உதவும்” என்று அவர் எழுதியிருக்கிறார்.
’1867 ஆம் ஆண்டில் தான் நூல் உரிமையைப் பதிவு செய்வதற்குரிய சட்டத்தை இந்திய அரசாங்கம் இயற்றியது. அதன் பின் புத்தக உரிமையைப் பாதுகாக்கும் பொருட்டு நூலாசிரியர், வெளியீட்டாளர் ஆகியோர் தமது நூல்களை அரசாங்கத்தில் பதிவு செய்து வந்துள்ளனர், 1867 ஆம் ஆண்டின் பிற்பகுதி தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் பற்பல நூல்கள் உரிமையைக் காக்கப் பதிவு செய்யப்பட்டன. பதிவு செய்யப்பட்ட நூலின் பிரதியும் சட்டத்தில் கண்டவாறு பதிவாளருக்கு வரலாயின. இங்ஙனமாக வந்த நூற்படிகள் அரசாங்கத்தின் சென்னை ஆவணக் களரி நூலகத்தில் (Madras record office library section ) கொண்டு வந்து சேர்க்கப்பட்டன. அவ்வகையில் சென்னை மாநிலத்தில் அச்சிடப்பட்டு பதிவு செய்யப்பட்ட பல்வேறு மொழி நூல்களும் இந் நூலகத்தின் கண் உள. உரிமைப் பதிவு செய்யப்பெற்ற நூல்கள் பற்றிய குறிப்புகளை அச்சு இதழில் (gazette) மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளியிட்டும் வந்துள்ளனர்.
தமிழ் நூல் விவர அட்டவணை வெளியிடுவதற்கு முன்பாக ஆங்கிலத்தில் சில விவர அட்டவணைகள் வெளியாகி இருக்கின்றன. அதை இந்த விவர அட்டவணை முதல் தொகுதியின் முன்னுரையில் பதிப்பாசிரியர் குறிப்பிட்டு இருக்கிறார். இந்தத் தமிழ் நூல் விவர அட்டவனை வெளியிடும் முயற்சி எவ்வாறு தொடங்கியது என்பதையும் அவர் விவரித்து இருக்கிறார்:
” இப்பொழுது தொகுத்து வெளியிடப்பெறும் இந்த தமிழ் நூல் விவர அட்டவணை தயாரிப்பதற்கு முன்பு நிகழ்ந்த முயற்சி ஒன்றினையும் ஈண்டு குறிப்பிடுதல் பொருத்தமாகும். சென்னை புத்தகாலயப் பிரச்சார சங்கத்தார் சென்னை ஆவணக் களரி நூலகத்தே உள்ள பதிவு செய்யப்பட்ட நூல்களுக்கு விபரங்கள் தொகுக்க சிலரை நியமித்து பெரும்பாலும் எழுதித் தொகுத்தனர். ஆனால் பின்னர் அவற்றை முறையாக மேற்பார்வையிட்டுப் பரிசோதித்து ஒழுங்குபடுத்தி செப்பம் செய்து வகைப்படுத்தும் பணி நடைபெறவில்லை. இந்நிலையில் விவரம் எழுதிய சீட்டுகளை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தாருக்கு விற்று விட்டனர். முதற்கண் அந்த சீட்டுகளைப் பெற்று விவர அட்டவணையை வெளியிடலாம் என்று கருதி அது பற்றி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தினரை அரசாங்கம் கேட்டது. அவர்கள் எவ்வகையான திருத்தமும் இன்றி சீட்டுகளை வெளியிடவும், திருத்தம் செய்து வெளியிடவும் செலவாகும் தொகை பற்றிய குறிப்பைக் கொடுத்தனர். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் இச்சீட்டுகளை முறைப்படுத்தி வெளியிடுவதிலும் , அவர்களுக்கு சென்னை அரசாங்கம் பழைய நூற்படிகளைக் கொடுத்து உதவுவதிலும் சில சிக்கல்கள் ஏற்பட்டதனால் தனிப்பட்ட முறையில் விவரம் தயாரித்து அரசாங்க வாயிலாக வெளிப்படுத்துதல் நலம் என்று எண்ணி தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றத்தில் அப்பணியை செய்ய அரசாங்கம் வழிவகை செய்தது. இதன் விளைவாகவே இந்த தமிழ் நூல் விவர அட்டவணை இன்று வெளிவரத் தொடங்குகிறது” என பதிப்பாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ் நூல் விவர அட்டவணை 1961 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியாகி இருக்கிறது. அதே காலகட்டத்தில் தனிநாயகம் அடிகளார் அவர்கள் தமிழ் இலக்கியம், பண்பாடு குறித்துப் பிற மொழிகளில் வெளியான ஆய்வு நூல்களின் அட்டவணை ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். அவர் ஆசிரியராக இருந்து நடத்தி வந்த ’தமிழ் கல்ச்சர்’ ( Tamil Culture, Vol IX, No 4, ) என்ற இதழின் அக்டோபர் – டிசம்பர் 1961 இதழில் இது தொடர்பாக அவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்தத் திட்டத்துக்கு மலாயா பல்கலைக்கழகம் ஒப்புதல் வழங்கி இருப்பதாகவும் அதில் தெரிவித்திருக்கிறார். தமிழ் அல்லாத பிற மொழிகளில் வெளியிடப்பெற்ற அச்சில் வெளிவந்த நூல்கள் குறித்த விவரங்களைத் தொகுப்பது அவரது நோக்கமாக இருந்துள்ளது. ஆங்கிலம்,பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் இதர ஐரோப்பிய மொழிகளில் வெளிவந்துள்ள நூல்களின் அட்டவணையைத் தயாரிக்க இத் திட்டத்தின் மூலம் அவர் முயன்றிருக்கிறார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் அவர்கள் தமிழ் மொழி மற்றும் மொழியியல் தொடர்பான நூல்களின் அட்டவணையைத் தொகுக்க ஒப்புக் கொண்டிருப்பதாகவும்; அதுபோல தனிநாயகம் அடிகளார் அவர்கள் ஆங்கிலம் பிரெஞ்சு இத்தாலி லத்தீன் மொழிகளில் வெளியாகி இருக்கும் செவ்வியல் தமிழ் இலக்கியம் மற்றும் அகராதி இயல் குறித்த நூல்களின் பட்டியலைத் தயாரிப்பது என்றும்; மலாயா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த முனைவர் எஸ். அரசரத்தினம் தமிழ் வரலாறு தொடர்பான நூல்களின் பட்டியலைத் தொகுப்பது என்றும்; பிரஞ்சு மொழியில் வெளியாகி இருக்கும் தமிழாய்வுகள் குறித்த நூல்களின் பட்டியலை ழான் ஃபிலியோசா மற்றும் எஸ். சர்வானே ஆகியோரிடம் பெறுவது என்றும்; கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த ஹல்லே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் அர்னோ லெஹ்மன் அவர்கள் ஜெர்மன் மொழியில் வெளியான தமிழ் ஆய்வு நூல்களின் பட்டியலைத் தொகுப்பதெனவும்; செக் மொழியில் வெளியான நூல்களின் பட்டியலை காமில் ஸ்வலபில் அவர்கள் தொகுப்பது என்றும்; ரஷ்ய மொழியில் வெளியான நூல்களின் பட்டியலை லெனின்கிராடைச் சேர்ந்த டாக்டர் ருடின் அவர்கள் தொகுப்பது என்றும்; மலாயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டி. எச். கில்லிங்லி தமிழில் வெளியாகி உள்ள கல்வெட்டியல், கலை, கட்டடக்கலை, இசை, நடனம் முதலானவை குறித்த நூல்களின் பட்டியலைத் தொகுப்பது என்றும் பொறுப்புகள் பகிரப்பட்டு , அந்த நூல் அட்டவணை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதன் விவரமும் எடுத்துக்காட்டுகளோடு குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தத் திட்டம் எந்த அளவு நிறைவேறியது என்று தெரியவில்லை.
தமிழ் மொழியின் வளர்ச்சியை, மேம்பாட்டை மனதிற்கு கொண்டு அரும்பாடு படும் தாங்கள் 1961 இல் தொடங்கப்பட்டு 1981 ஆம் ஆண்டோடு நின்று போயிருக்கும் தமிழ் நூல் விவர அட்டவணைத் திட்டத்தை உயிர்ப்பித்து அதன்மூலம் தொடர்ந்து விவர அட்டவணைகளை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே வெளியான தொகுதிகள் தற்போது அச்சில் கிடைக்கப்பெறவில்லை என்பதால் அவற்றை மறு பதிப்பு செய்வதும் அவசியமாகும். அதுபோலவே, தனிநாயகம் அடிகளார் துவக்கிய திட்டத்தையும் செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தங்களை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.