சென்னை: சார்பட்டா பரம்பரரைக்கு பின்னர் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தை இயக்கியுள்ளார் பா ரஞ்சித்.
ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகிறது.
காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஷபீர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
நட்சத்திரம் நகர்கிறது
ரஞ்சித் இயக்குநராக அறிமுகமான ‘அட்டக்கத்தி’ படம், காதல் பின்னணியில் உருவாகியிருந்தாலும், அதில் அவர் அரசியல் பற்றியும் பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கிய அனைத்துப் படங்களும், அவர் சந்திக்கும் அடையாள அரசியலை பிரதானமாக கொண்டு எடுத்திருந்தார். இந்நிலையில், சார்பட்ட பரம்பரைக்குப் பின்னர், ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தை இயக்கியுள்ளார்.
ட்ரெய்லரில் கதை சொன்ன ரஞ்சித்
‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் போஸ்டர்கள் வெளியான போதே, இது காதல் படமாகவும், தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்தும் பேசும் என சொல்லப்பட்டது. தொடர்ந்து இந்தப் படம் குறித்து வெளியான அனைத்து அப்டேட்களிலும், இதுபோன்ற லீட்கள் இருந்தன. சமீபத்தில் வெளியான ‘நட்சத்திரம் நகர்கிறது’ ட்ரெய்லர், இந்தப் படத்தின் கதைப் பின்னணியை விவரித்தது.
உண்மையை சொன்ன ரஞ்சித்
‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஷபீர், தாமு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ‘நட்சத்திரம் நகர்கிறது’ கதை குறித்து, இயக்குநர் பா ரஞ்சித் பேசியுள்ளார். “நட்சத்திரம் நகர்கிறது காதல் படம் அல்ல, அது காதலைப் பற்றிய படம். ஆணும் பெண்ணும் சந்திக்கும்பொழுது காதலாகத்தான் தொடங்குகிறது. ஆனால், அது குடும்பத்துக்கு தெரியும்பொழுதுதான் சமூகத்தின் பிரச்சினையாக மாறுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
காதலுக்கு ஒரு மதிப்பீடு இருக்கு.
தொடர்ந்து பேசியுள்ள அவர், “காதல் வர்க்கத்தையும் ஜாதியையும் பின்னிப் பிணைந்ததாக இருக்கிறது. காதல் பெர்சனலாக இருக்கும்பொழுது எந்த பிரச்சினையும் இல்லை. இப்போ காதலை ஒரு பொலிட்டிக்கல் டெர்ம் ஆக மாற்றி வச்சிருக்காங்க. அதை பற்றி தான் நட்சத்திரம் நகர்கிறது விவாதிக்கும். இதில் ஆண், பெண் காதல் மட்டும் இல்லாமல், ஒருபாலின காதலைப் பற்றியும், திருநங்கையின் காதலைப்பற்றியும் பேசியுள்ளேன்” எனக் கூறியுள்ளார்.
பாண்டிச்சேரி தான் கதைக்களம்
மேலும், “பாண்டிச்சேரியில் உள்ள நாடக தியேட்டரில் நடிக்கும் நடிகர்கள், அவர்களின் எமோஷ்னல், காதலை இந்தப்படம் விவரிக்கும். ஒரு காதலை குடும்பமும் சமூகமும் எப்படிப் பார்க்கிறது என இந்தப் படம் முழுக்க பேசுகிறோம். நவீன சினிமாவின் தாக்கத்தில் இந்த கதையை எழுதியுள்ளேன்.” என, ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் முழு கதையையும் வெளிப்படையாக கூறியுள்ளார் ரஞ்சித்.
அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
எப்போதும் அரசியல் பின்னணியில் படங்கள் இயக்கும் ரஞ்சித், ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் புதுமையான முயற்சியில் இறங்கியுள்ளதை, அவரது பேட்டியில் பார்க்க முடிகிறது. காதலுடன் LGBT பற்றியும், அதன் பின்னணியில் உள்ள அரசியலையும் கையிலெடுத்துள்ளார். இதனால், இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் இருந்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.