போபால்: மத்திய பிரதேசத்தில் 17 வயது சிறுமி கொலை வழக்கை விசாரித்து வந்த காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் சாமியார் ஒருவரிடம் குற்றவாளியை கண்டுபிடிக்க யோசனை கேட்கும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
மத்திய பிரதேச மாநிலம் ஓடபுர்வா கிராமத்தில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி 17 வயது சிறுமியின் உடல் கிணறு ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக பமிதா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹரிராம் அஹிர்வார் என்பவரது மகளான 17 வயது சிறுமியை ரவி அஹிர்வார், குத்தா அஹிர்வார், ராகேஷ் அஹிர்வார் ஆகிய மூன்று பேரும் கொலை செய்துவிட்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி இருக்கின்றனர்.
சாமியாரிடம் ஆலோசனை
உறவினர்களின் குற்றச்சாட்டை தொடர்ந்து போலீசார் 3 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆனால், அவர்கள் மூவருக்கு எதிராக எந்த விதமான ஆதாரங்களும் சிக்காததால் அவர்களை போலீசார் விடுவித்தனர். இந்த வழக்கை காவல் உதவி ஆய்வாளர் அனில் சர்மா விசாரணை நடத்தி வந்திருக்கிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் சாமியார் ஒருவரிடம் கொலை வழக்கு தொடர்பாக ஆலோசனை கேட்டதாக வீடியோ வெளியானது.
பெயர்களை சொன்ன சாமியார்
சட்டதார்பூர் மாவட்டத்தில் உள்ள சாமியார் பண்டோகார் சர்காரை சந்தித்த உதவி ஆய்வாளர் அனில் சர்மா, அவருக்கு அருகே அமர்ந்துகொண்டு கொலையாளியை கண்டுபிடிப்பது பற்றி ஆலோசனை கேட்டிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் சாமியார் பண்டோகர் சர்கார், சிலரது பெயர்களை கூறுகிறார்.
சிறுமியின் மாமா கைது
அவர் கூறியதில் தவறவிடப்பட்ட நபர்களை காவல்துறை அழைத்து செல்லுமாம். இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து பமிதா காவல் நிலைய ஆய்வாளர் பங்கஜ் சர்மா பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இந்த நிலையில் கொல்லப்பட்ட சிறுமியின் மாமா திராத் அஹிவாரை போலீசார் கைது செய்தனர்.
உறவினர்கள் எதிர்ப்பு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட சிறுமியின் உறவினர்கள் சாமியாரின் கருத்தை கேட்ட பிறகே திராத்தை காவல்துறை செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து சத்தார்புர் போலீஸ் எஸ்.பி தெரிவிக்கையில், “ஆதாரத்தின் அடிப்படையிலேயே போலீஸ் திராத்தை கைது செய்துள்ளது. சாமியார் சர்காரிடம் உதவி ஆய்வாளர் பல்வேறு காரணங்களுக்காக சென்றுள்ளார். ஆனாலும் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளோம்.” என்றார்.