திருவாரூர்: திருவாரூர் கலெக்டர் அலுவலக பின்புறத்தில் அரசு மருத்துவக்கல்லூரியில் நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்த லாரி டிரைவர் வேலுசாமியின் மகள் காயத்ரி(22) கடந்த 4 ஆண்டுகளாக மருத்துவம் படித்தார். தற்போது பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார். பயிற்சி டாக்டர்களுக்கான விடுதியில் தங்கி இருந்த காயத்ரி, நேற்று முன்தினம் இரவு மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் காயத்ரி தங்கி இருந்த அறையில் இருந்து அவர் எழுதி வைத்து இருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், நான் மன அழுத்தத்தில் உள்ளேன். மருத்துவ துறைக்கு நான் அன்பிட்(தகுதியானவள் இல்லை) என எழுதி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மகள் இறந்த தகவல் அறிந்து நாமக்கல்லில் இருந்து திருவாரூருக்கு வந்த காயத்ரியின் பெற்றோர், மகள் உடலை பார்த்து கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க வைத்தது. அப்போது அவர்கள் கூறுகையில், உடல்நிலை சரியில்லாத தனது மகளுக்கு டீன் ஜோசப் ராஜ், விடுமுறை அளிக்காததால் தான் மகள் தற்கொலை செய்து கொண்டாள் என்றனர்.
இதுகுறித்து காயத்ரியின் தந்தை வேலுசாமி அளித்த புகாரின்பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் ரகமத்நிஷா தலைமையிலான போலீசார் நேற்று மாலையே விசாரணையை துவக்கினர். அவர்கள் மாணவி தங்கியிருந்த அறையை பார்வையிட்டனர். தொடர்ந்து இன்று காயத்ரியின் பெற்றோர் மற்றும் சக மாணவர்களிடம் விசாரணை நடத்துகின்றனர். இந்நிலையில் காயத்ரியின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.