வாழ்க்கையில் அனைவருக்கும் துணை தேவைப்படுகிறது. தனியாக வாழ்ந்து விடலாம் என்ற நம்பிக்கை பலருக்கு இருந்தாலும் சில தருணங்களில் ஆறுதலாய் கை கொடுக்க, ஆதரவாய் தோள் கொடுக்க, பாரங்களை பகிர்ந்துகொள்ள ஒரு துணையின் தேவை அவசியமாகிறது. இதை புரிந்துகொண்ட ஒரு மகள் செய்துள்ள ஒரு நெகிழ்வான செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ரதிமேனன். இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமான நிலையில், ரதிமேனன் தனிமையில் வசித்து வந்தார். இந்தநிலையில் தனது தாயார் தனிமையில் தவித்து வருவதை உணர்ந்த ரதிமேனனின் மகள் பிரசிதா, கண்டிப்பாக தனது தாயாருக்கு ஒரு துணை வேண்டும் என்று சிந்திக்கத்தொடங்கினார்.
ஆகையால், தனது தாய்க்கு திருமணம் செய்து வைக்க அவர் முடிவு செய்தார். இதற்காக தகுந்த மணமகனை தேட ஆரம்பித்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்த திவாகரன் என்பவர்தான் தனது தாய்க்கு ஏற்ற துணை என்று பிரசிதா முடிவு செய்தார்.