புதுடெல்லி: சிபிஐ-யால் இன்னும் இரண்டு – மூன்று தினங்களில் தான் கைதாகலாம் என டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியுள்ளார்.
மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அதிகாரிகளின் வீடுகளில் இருந்து முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த மணிஷ் சிசோடியா பேசுகையில், “ சிபிஐ-யால் இன்னும் இரண்டு – மூன்று தினங்களில் நான் கைதாகலாம். அவர்கள் என் கைபேசியையும், மடிக்கணினியையும் எடுத்து சென்றுவிட்டனர்.
நாங்கள் அச்சம் கொள்ளவில்லை. உங்களால் எங்களை உடைக்க முடியாது.மத்தியில் ஆளும் பாஜக அரசு கலால் வரி மோசடி குறித்து கவலைப்படவில்லை, அரவிந்த் கேஜ்ரிவாலைப் பற்றி கவலைப்படுகிறது. ஏனெனில் வரும் மக்களவை தேர்தலில் கேஜ்ரிவாலை மோடிக்கு போட்டியாக அவர்கள் பார்க்கின்றனர்.
டெல்லி கல்வி மாதிரியைப் பாராட்டி நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியான செய்தியும் மத்திய அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.” என்று தெரிவித்திருக்கிறார்.
என்ன நடந்தது? டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான அரசு, புதிய மதுபானக் கொள்கையை கடந்த ஆண்டு நவ.16-ல் அறிமுகப்படுத்தியது. அதன்படி, மதுபான மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. டெல்லி முழுவதும் 849 விற்பனை நிலையங்களில் சில்லறை விற்பனை மேற்கொள்ள தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டது. மதுபானங்களை வீட்டுக்கே சென்று விநியோகம் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது. பரிசோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட இந்த புதிய மதுபானக் கொள்கை, கடந்த ஜூலை 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதனிடையே, டெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை குறித்து சர்ச்சை எழுந்தது. இதனால், அதை திரும்பப் பெறுவதாக டெல்லி அரசு அறிவித்தது. மேலும், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அரசு கடைகளின் மூலமே மது விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் ஆம் ஆத்மி அரசு பெரும் முறைகேட்டில் ஈடுபட்டதாக டெல்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் பரிந்துரை செய்தார். இந்தப் பிரச்சினை ஆம் ஆத்மி அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதலை ஏற்படுத்தியது.
மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ, டெல்லி அரசின் கலால் கொள்கை அறிவிப்பில் விதிமீறல் இருப்பதாக கூறி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது. அதில், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக, மணிஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.