டெல்லி: டெல்லி அரசின் கலால் வரி கொள்கையில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த மணீஷ் சிசோடியா, அடுத்த 3, 4 நாட்களில் அமலாக்கத்துறை என்னை கைது செய்யலாம்; அதற்கு நாங்கள் அஞ்சப்போவதில்லை. கல்வித்துறையில் டெல்லி அரசின் சாதனைகள் உலகம் முழுவதும் பேசப்படுவதை பாஜகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றார். சிபிஐ அதிகாரிகள் எனது வீட்டிற்கு நேற்று வந்தனர். துணை முதல்வர் அலுவலகத்திலும் சோதனை நடத்தினர். அதிகாரிகள் நல்ல முறையில் நடந்துகொண்டார்கள். உயரதிகாரிகளின் உத்தரவுக்கு அவர்கள் கீழ்ப்படிய வேண்டியிருந்தது.
ஆனால் மிகவும் நேர்த்தியாக நடந்து கொண்டதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மதுவிலக்கு விவகாரத்தில் பிரச்சனையில்லை; அரவிந்த் கெஜ்ரிவாலை தடுத்து நிறுத்தவே எனது வீட்டில் சிபிஐ சோதனை நடத்தப்படுகிறது என்று குற்றச்சாட்டினார். பாஜகவை கண்டு ஆம் ஆத்மி பயப்படாது; பாஜகவால் எங்களை உடைக்கவும் முடியாது என்று சூளுரைத்தார். 2024 தேர்தல் பாஜகவுக்கும், ஆம் ஆத்மிக்கும் தான் எனவும் மணீஷ் சிசோடியா தனது பேட்டியில் குறிப்பிட்டார்.