சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில் மிக பலத்த மழை கொட்டி வருவதால் பல்வேறு இடத்தில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், காலை முதல் மிக பலத்த மழை கொட்டி வருகிறது. குறிப்பாக கங்ரா, சம்பா, பிலாஸ்பூர், மாண்டி ஆகிய மாவட்டங்களில் மேகவெடிப்பு போல மிக பலத்த மழை கொட்டியது. இதனால் ஆறுகளில் இரு கரைகளையும் தொட்டு வெள்ளம் பாய்ந்தோடுகிறது. கங்ரா மாவட்டத்தில் சாக்கி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த ரயில்வே பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
பெருமழையில் இமாச்சலப்பிரதேசத்தின் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. சூலன் மாவட்டத்தில் கந்தகாட் மலைப்பகுதியின் ஒரு பகுதி சரிந்துள்ளதால் தேசிய நெடுஞ்சாலை எண் 5ல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. சம்பா மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் தரைமட்டமாகிவிட்டன. இடிபாடுகளில் இருந்து 18 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன 3 பேரை மீட்பு படை தேடி வருகிறது.
குல்லு மாவட்டத்திலும் சர்மசாலா பகுதி எல்லையிலும், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக இமாச்சல அரசு கூறியிருக்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்திலும் பரவலாக கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை டேராடூனில் ஏற்பட்ட மேகவெடிப்பே வெள்ளத்திற்கு காரணம் என்று தெரிவிக்கும் உத்தரகாண்ட் மீட்பு படையினர் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதாக கூறியுள்ளனர்.