சென்னை: சென்னையில் சட்டவிரோதமாக மழைநீர் வடிகாலில் கொடுக்கப்பட்டிருந்த 10,664 கழிவுநீர் இணைப்புகளை மாநகராட்சி துண்டித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் 2,071 கி.மீ. நீளமுள்ள 8,835 மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பல மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் இணைப்பு சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளது. இதனால், மழைநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, மழைக் காலங்களில் வெள்ள பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இவற்றை தடுக்கும் வகையில், மழைநீர் வடிகாலில், சட்டவிரோதமாக கொடுக்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளை கண்டறிந்து துண்டிக்க, மாநகராட்சி வார்டு வாரியாக குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தக் குழுவினர் இதுவரை 11,195 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகளை கண்டறிந்துள்ளனர். அதில், 10,664 இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, 46.81 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 1,317; கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,225; அண்ணாநகர் மண்டலத்தில் 1,117; அம்பத்தூர் மண்டலத்தில் 1,050 கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.