இங்கிலாந்தில் பிரதமர் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. தேர்தலின் இறுதிச்சுற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், அமைச்சர் லிஸ்ட் டிரஸ் ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. ரிஷி சுனக் இங்கிலாந்து முழுவதும் பரபரப்பான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், ரிஷி சுனக் தன் மனைவி அக்ஷதாவுடன் இங்கிலாந்தில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். அப்போது அங்கு இருந்த மக்களுடன் அவர் உரையாடினார்.
ரிஷி சுனக், அக்ஷதா மூர்த்தி தம்பதியினருக்கு கோயில் சார்பாக கிருஷ்ணர் படங்கள் அடங்கிய புத்தகம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாகப் பேசிய ரிஷி சுனக், “பிரதமர் தேர்தல் கடுமையன சவாலாக இருக்கிறது. மிகவும் கடினமான நேரங்களில் என் மனைவி அக்ஷதா எனக்கு பகவத் கீதையின் போதனைகளை செல்போன் வாயிலாக அனுப்புவார். பகவத் கீதையின் போதனைகள் எனக்குக் வலிமையை கொடுக்கிறது. கடந்த சில வாரங்களாக பகவத் கீதைதான் எனக்கு பலம் கொடுக்கிறது” என்றார்.