கர்நாடகாவில் பாரதிய ஜனதா அமைச்சர் ஒருவரின் பேச்சு, மாநில அரசியலில் பூகம்பத்தை கிளப்பியுள்ளது. இரு தினங்களுக்கு முன்பு பல்லாரியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த குருபா சமூக மக்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பாஜக அமைச்சரும் (போக்குவரத்துத் துறை) பழங்குடி சமூகத்தின் பிரதிநிதியுமான ஸ்ரீராமலு கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “என்னை என்றாவது குருபா சமூகத்திற்கு எதிராக நீங்கள் பார்த்தது உண்டா? அதேபோல்தான் நான் சித்த ராமையாவை பார்க்கிறேன். அவரை ஒருபோதும் எதிர்க்கவில்லை. அவரும் என்னை எதிர்க்க மாட்டார். அவர் முதலமைச்சராக நானும் விரும்புகிறேன்.
அவரிடம் கேட்டால் நான் முதலமைச்சராக விருப்பம் தெரிவிப்பதாக கூறுவார். இதுதான் அரசியல் சமூக ஒற்றுமை. இன்றைய காலகட்டத்தில் இதுதான் நமக்கு தேவை” என்றார். மேலும், சித்த ராமையா முதலமைச்சராக வாய்ப்பு வந்தபோது அவரது வெற்றிக்கு தாம் உதவியதாகவும் கூறினார். 2018ஆம் ஆண்டு பாதமி (Badami) தொகுதியில் ஸ்ரீராமுலுவை சித்த ராமையா தோற்கடித்தார்.
இந்த நிலையில் ஸ்ரீராமுலுவின் பேச்சு பல அரசியல் யூகங்களை கிளப்பியுள்ளது. ஸ்ரீராமுலுவுக்கு பாஜகவில் செல்வாக்கு இல்லை. ஆகையால் இழந்த செல்வாக்கை மீட்க இவ்வாறு பேசுகிறார்.
மேலும் மாநிலத்தில் பாஜக தோல்வியின் விளிம்பில் உள்ளது. அதை மீட்கத்தான் இந்தப் பேச்சு எனக் காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் வரவேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வாறு பேசியதாக ஸ்ரீராமுலு விளக்கம் அளித்துள்ளார்.
இருப்பினும் பாஜக இந்தக் கருத்துகளை எளிதாகப் பார்க்கவில்லை. ஸ்ரீராமுலுவை பெங்களூருவில் உள்ள கட்சியின் தலைமையகத்துக்கு அழைத்து விளக்கம் கேட்க இருப்பதாக கூறப்படுகிறது.
கர்நாடகாவில் உள்ள வால்மீகி நாயக் பழங்குடி இனத்தை சேர்ந்த ஸ்ரீராமுலு பாரதிய ஜனதா கட்சியில் வலுப்பெற ரெட்டி சகோதரர்களே காரணம் இவர்கள்தான் 2004 முதல் 2014 வரை இவரை தாங்கி பிடித்து கட்சியில் வளர்த்துவிட்டனர்.
இந்தக் காலக்கட்டத்தில்தான் ரெட்டி சகோதரர்கள் கல் குவாரிகளை சட்டவிரோதமாக கைப்பற்றினர். பல்லாரி பகுதியில் வால்மீகி நாயக்குகள் அடர்த்தியாக வாழ்கின்றனர். இதனால் ஸ்ரீராமுலு எளிதில் கட்சியில் பெயரெடுத்தார். ரெட்டி சகோதரர்கள் செல்வாக்கு இழந்த போதிலும் ஸ்ரீராமுலு செல்வாக்கு இழக்கவில்லை.
மேலும் ஸ்ரீராமுலுக்கு கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 2018 சட்டப்பேரவை தேர்தலில் பழங்குடியின மக்கள் அடர்த்தியாக வசிக்கும் 15-20 தொகுதிகளின் தேர்தல் மேற்பார்வை இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
எனினும் பாரதிய ஜனதாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எதிர்பார்க்கப்பட்ட வெற்றி கிடைக்கவில்லை. பல்லாரியில் 8 இடங்களில் 3 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. ஸ்ரீராமுலு, காங்கிரஸ் வேட்பாளர் சித்த ராமையாவிடம் தோல்வியை தழுவினார். பாதாமியில் குருபா மறறும் பழங்குடியினர் 30-30 விழுக்காடு என சம எண்ணிக்கையில் இருக்கின்றனர்.
இதற்கிடையில் 2023 சட்டமன்ற தேர்தலில் பாதாமி தொகுதியில் சித்த ராமையா மற்றும் ஸ்ரீராமுலு ஆகியோர் போட்டியிட வாய்ப்பு இல்லை எனத் தெரியவருகிறது. 2018 சட்டமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக திகழ்ந்த போதிலும் அவர்கள் ஆட்சியமைக்க போதுமான அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் ஆட்சியமை்கும் வாய்ப்பை இழந்தது.
இந்த நிலையில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் ரமேஷ் ஜஹார்லி உள்ளிட்ட தலைவர்கள் இணைந்தனர். இவர்களும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். ஆகையால் பின்னாள்களில் கட்சியில் ஸ்ரீராமுலு செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமா குறைந்தது.
மேலும், 2019 மக்களவை தேர்தலில் ஸ்ரீராமுலு தனது உறவினருக்கு சீட் கொடுக்குமாறு கட்சி தலைமையை நாடினார். இதற்கு மறுப்பு தெரிவித்த பாஜக ரமேஷ் ஆதரவாளருக்கு வாய்ப்பு கொடுக்க முன்வந்தது.
இதற்கிடையில் ஸ்ரீராமுலுவின் மற்றொரு கோரிக்கையான வால்மீகி நாயக்கர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் கோரிக்கையை வரவேற்கிறது. இதன் மூலம் பி.எஸ் எடியூரப்பாவின் லிங்காயத் சமூகத்தை சமன்செய்ய முடியும் என நம்புகிறது.
ஆனால் இதெல்லாம் தற்போது சாத்தியமில்லை. மற்ற சமூகத்தினரும் இடஒதுக்கீடு கோருகின்றன.
இதற்கிடையில் தனது கருத்துக்கு முழு விளக்கம் அளித்துள்ள ஸ்ரீராமுலு, “நான் கூறிய கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டன. நான் என்ன கூறினேன் என்றால், அனைத்து சமூகத்தினரும் கசப்பை மறந்து ஒன்றிணைய வேண்டும்.
ஏனெனில் பிரதமர் மோடி அனைத்து தரப்பு மக்களுக்காகவும் வேலை செய்கிறார். அவரின் தலைமையில் கீழ் நாம் ஒன்றிணைய வேண்டும், அனைவரும் பாரதிய ஜனதா கட்சியில் இணைய வேண்டும்” என்றார்.
தொடர்ந்து பாதாமி தொகுதி தோல்வி தொடர்பான கேள்விக்கு, “120 தொகுதிளில் வேலை செய்தோம் அதனால் பாதாமி தொகுதியில் சிறப்பு கவனம் செலுத்தி வேலை செய்ய முடியவில்லை. சில இடங்களில் தோற்றுவிட்டோம்” என்றார்.
மேலும், “சித்த ராமையா காங்கிரஸ் கட்சியில் மகிழ்ச்சியாக இல்லை. அதனால் அழைப்பு விடுத்தேன்” என்றும் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர், “ரமேஷ் மற்றும் ஸ்ரீராமுலு சித்த ராமையா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். வால்மீகி நாயக் மக்களும் சித்த ராமையா பின்னால் நிற்கின்றனர். இது பாரதிய ஜனதாவுக்கு பயத்தை ஏற்படுத்திவிட்டது” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“