நாக்பூர்: மகாராஷ்டிராவில் காதலுக்கு இடையூறாக இருந்த காவல் துறை அதிகாரியான தாயை கழுத்து நெரித்துக் கொன்ற மகள் மற்றும் காதலனை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த சந்திர காந்த் அத்ரம் என்பவர் கடந்த 2000ம் ஆண்டு ஜூனில் நக்சல் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவர் கொலையான 5 நாட்களுக்கு பின்னர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவி நிர்மலாவுக்கு, ஊர்மிளா அத்ரம் பிறந்தார். தற்போது ஊர்மிளா அத்ரம் 22 வயது பெண்ணாக உள்ளார்.
தனது கணவரை இழந்ததால், மாநில காவல் துறையில் நிர்மலாவுக்கு சிறப்பு காவல் அதிகாரி பணி வழங்கப்பட்டது. இவ்வாறாக தனது மகளுடன் நிர்மலா வாழ்ந்து வந்தார். இந்நிலையில் பாம்ராகரில் உள்ள கல்லூரியில் கலைப்பிரிவில் பட்டம் பெற்ற ஊர்மிளா, கடந்த 4 ஆண்டுகளாக காய்கறி விற்பனையாளரான காதலன் ரூபேஷ் யெங்கந்தல்வார் என்பவரை காதலித்து வந்தார். அவருடன் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தனது தாய் நிர்மலாவிடம் மகள் ஊர்மிளா வற்புறுத்தி வந்துள்ளார்.
ஆனால் இவர்களது காதலுக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், தனது தாயை ஊர்மிளாக திட்டிக் கொண்டே இருந்துள்ளார். இதனால் மகளுக்கும் தாய்க்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. தங்களது காதலுக்கு இடையூறாக இருக்கும் தாயை தனது காதலனுடன் சேர்ந்து கொன்றுவிட ஊர்மிளா திட்டமிட்டார். அதன்படி ஊர்மிளாவும், ரூபேசும் வீட்டில் இருந்த நிர்மலாவை துண்டால் கழுத்தை நெரித்துக் கொன்றனர். அதன்பின் அஹேரியில் உள்ள தனது அறைக்கு ரூபேஷ் சென்றார். அவர் தனது அறை நண்பனான நிலேஷிடம், ஊர்மிளாவை தனது அறைக்கு அழைத்து வருமாறு கேட்டுக் கொண்டார்.
அதன்படி, ஊர்மிளாவை தனது பைக்கில் நிலேஷ் அழைத்துக் கொண்டு வந்தார். அப்போது ரோந்து பணியில் இருந்த அஹேரி போலீஸ்காரர் யஷ்வந்த் குட்டே, அவர்களை வழிமறித்து விசாரணை நடத்தினார். அவர்கள் முன்னுக்கு பின் உளறியதால் சந்தேசகமடைந்த போலீஸ்காரர், தனது உயரதிகாரிக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் ஊர்மிளாவின் வீட்டிற்கு இருவரையும் அழைத்து சென்றனர். அங்கு இறந்து கிடந்த நிர்மலாவை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
ஊர்மிளாவிடம் விசாரித்தபோது, தனது தாய் தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரிடம் தெரிவித்தார். உடனே நிர்மலாவின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், தங்களுக்கே உரிய பாணியில் விசாரணை நடத்திய போது, முழு விபரங்களும் தெரியவந்தது. தானும், காதலனும் சேர்ந்து கொன்றதை ஊர்மிளா ஒப்புக் கொண்டார். அதையடுத்து கொலையாளியான காதலன் ரூபேஷ், காதலி ஊர்மிளா, ரூபேஷின் நண்பன் நிலேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.