பழனி பஞ்சாமிர்தம்… தஞ்சாவூர் நாதஸ்வரம்… புவிசார் குறியீடு என்றால் என்ன? அதனால் என்ன நன்மை?

உற்பத்தி செய்யப்படும் பொருள் மற்றும் உணவின் தரம் அங்குள்ள நிலத்தின் தன்மை, நீரின் தன்மை, தட்பவெப்ப நிலை ஆகிய காரணங்களால் மாறுபடும். இதை அடிப்படையாக கொண்டு வழங்கப்படும் புவிசார் குறியீடு, உற்பத்தி செய்யப்படும் இடத்தின் பெருமை, பொருட்களின் பாரம்பரியம், தரம் ஆகியவற்றிற்கு சான்றாக அமைகிறது.

புவிசார் குறியீடு வாங்க.. அது விவசாய பொருட்களாகவோ, வேளாண் பொருட்களாகவோ, கைவினை இயற்கை பொருட்களாகவோ இருக்க வேண்டும்.

புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் பொருட்களின் கண்காட்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ்.

இந்தப் பொருள்களைப் பற்றி உலக நாடுகள் அறிந்து கொள்ளவும், ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு இந்த புவிசார் குறியீட்டை வழங்குகிறது.

புவிசார் குறியீட்டை வைத்து அந்த பொருள் எந்த இடத்தில் தயாரிக்கப்படுகிறது? அந்த பொருட்களின் தரம் என்ன என்பதை அறியலாம். உதாரணமாக தமிழ்நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால் கோவா, பழனி பஞ்சாமிர்தம், கோவில்பட்டி கடலை மிட்டாய், பத்தமடை பாய், ஈரோடு மஞ்சள், மதுரை மல்லி, காஞ்சிபுரம் பட்டு, பவானி ஜமுக்காளம், தஞ்சாவூர் ஓவியத்தட்டு, திண்டுக்கல் பூட்டு, சேலம் ஃபேப்ரிக் துணிகள் ஆகியவை புவிசார் குறியீடு பெற்றுள்ள பொருட்களில் சில. நம் நாட்டில் இதுவரை 333 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

ஒரே மாதிரியான பெயரில் தயாரிக்கப்படும் போலி நிறுவனங்களுடைய பொருட்களை கண்டறிந்து தடை செய்ய இந்த புவிசார் குறியீடு பயன்படுகிறது.

உலக வணிக அமைப்பில் (WTO) உறுப்புநாடான இந்தியாவில் புவிசார் குறியீடுகள் சட்டம் (பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம்) ஆண்டு, 1999 நிறைவேற்றப்பட்டு செப்டம்பர் 2003-ல் நடைமுறைக்கு வந்தது.

இந்திய அரசின் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அறிவுசார் சொத்துரிமை துறை புவிசார் குறியீடு என்ற அங்கீகாரத்தை 2003-ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. இந்தியாவில் பொருட்கள் தொடர்பான புவிசார் குறியீடுகள் பதிவு மற்றும் பாதுகாப்புக்கு இந்த சட்டம் வழி வகுக்கிறது.

புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் பொருட்களின் கண்காட்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ்.

இந்த சட்டத்தினால் என்ன பலன் ?

மற்ற ஊர்களில் விளைந்த மஞ்சளை ஈரோடு மஞ்சள் என்று கூறி விற்பனை செய்ய முடியாது. வேறு இடத்தில் பால்கோவா தயார் செய்து விட்டு இதுதான் ஸ்ரீவில்லிபுத்தூர் பால் கோவா என்று சந்தையில் விற்க முடியாது. இதற்கு மாறாக மற்ற இடங்களில் தயாரித்து இந்த ஊரின் பெயரில் சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும்.

இதனால் குறிப்பிட இடத்தில் உருவாகும் பொருட்களை மக்களால் ஏமாறாமல் வாங்க முடியும். பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கும் தகுந்த லாபம் கிடைக்கும். சர்வதேச அளவில் இதனால் ஏற்றுமதி அதிகரிக்கும், பொருட்களுக்கான சட்டபூர்வ பாதுகாப்பு கிடைக்கும்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை சென்னை, திருமங்கலம், வி.ஆர். மாலில் தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: “தமிழகத்தில் 43 பெருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதில் 10 பொருட்கள் தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்தது. தஞ்சாவூர் நாதஸ்வரம், நாச்சியார் கோவில் விளக்கு, ஓவியம், தலையாட்டி பொம்மை உள்பட 10 பொருட்களுக்கு இந்த புவிசார் குறியீடு கிடைத்து இருக்கிறது.

புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் பொருட்களின் கண்காட்சி துவக்கம்

நாம் தயாரித்த பொருட்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் வகையில் இந்த புவிசார் குறியீட்டை பெறுகிறோம். புவிசார் குறியீடு தலைமை அலுவலகம் சென்னையில்தான் இருந்தாலும், நாம் குறைவான அளவிலேயே விண்ணப்பித்து இருக்கிறோம்.

முதல் அமைச்சரின் உத்தரவின்படி, இன்னும் 24 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளோம். நம்முடைய பண்பாட்டை, கலாசாரத்தை மற்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.

மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெற முதல் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று, அதனை பெறுவதற்கான முயற்சியை செய்வோம். புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை மாணவர்களை அறிந்து கொள்ள செய்வோம். புத்தக கண்காட்சியில் தனி அரங்கு அமைத்து இந்த பொருட்களை இடம்பெற செய்வோம்” என்று பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.