கோட்டயம்: கேரளாவில் 37 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகள் இறந்த அதே இடத்தில், கிட்டத்தட்ட அதே நேரத்தில் தந்தையும் உயிரிழந்த சம்பவம் நெகிழ்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
என்னதான் அறிவியல் வளர்ச்சியில் மனிதன் உச்சத்தை அடைந்திருந்தாலும், இன்று வரை சில கேள்விகளுக்கு நம்மால் பதில் கூற முடியவில்லை. உயிரணு எப்படி குழந்தையாக மாறுகிறது என்பதை கூற முடிந்த அறிவியலால் அந்த உயிரணு எப்படி உருவாகிறது, எப்படி இயங்குகிறது என்பதை விளக்க முடியவில்லை.
மரணத்துடன் நமது வாழ்வு முடிந்துவிட்டதாக கூறும் அறிவியல், அடுத்த ஜென்மம், மறுபிறப்பு போன்றவற்றை அடியோடு மறுக்கிறது. ஆனால் இன்றும் முன்ஜென்மம் பற்றிய ஆதாரங்கள், ஏன் வீடியோ ஆதாரங்கள் கூட இருக்கின்றன. இங்கிலாந்தில் பிறந்த 2 வயது குழந்தை தனக்கு சம்பந்தமே இல்லாத ஜெர்மன் மொழியில் சரளமாக பேசுவதும், ஆஸ்திரேலியாவில் 3 வயது சிறுமி, தான் முன்ஜென்மத்தில் பிரேசிலில் எந்த இடத்தில் வாழ்ந்தேன், அங்கு என்னென்ன இருந்தன என மிகத் துல்லியமாக கூறியதையும் இன்றைய அறிவியலால் விளக்க முடியவில்லை. இதுபோல சில அமானுஷ்யங்கள், கர்மவினைகள், விதிப்பயன் போன்றவற்றுக்கும் அறிவியலில் விடை இல்லை.
கோட்டயம்
இந்நிலையில், இப்படியொரு சம்பவம்தான் கேரளாவில் நடந்துள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் ஜோசப் (68). அரசு ஊழியராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஜோசப்பின் வாழ்வில் மிகுந்த துயரகரமான சம்பவம் நடந்துள்ளது. அவரும், அவரது மனைவியும் கடந்த 1985-ம் ஆண்டு தங்களின் ஒரே மகளான ஜோய்ஸை அழைத்துக் கொண்டு படம் பார்க்க திரையரங்கம் சென்றுள்ளனர். திரைப்படம் முடிந்து இரவு 9 மணியளவில் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது போகும் வழியில் தெள்ளுகம் பகுதியில் இருந்த ஓட்டலில் உணவு வாங்குவதற்காக ஆட்டோவில் இருந்து இறங்கி ஜோசப் சென்றுள்ளார்.
தந்தை நிலைமை
தந்தை செல்வதை பார்த்த 4 வயது சிறுமியான ஜோய்ஸும் சட்டென இறங்கி சாலையில் ஓடியுள்ளார். அப்போது அங்கு வந்த கார் சிறுமி ஜோய்ஸ் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் ஜோசப் மற்றும் அவரது மனைவியின் மனதை மிகவும் பாதிப்படைய செய்தது. மகள் உயிரிழந்த ஊரில் வாழ பிடிக்காத ஜோசப்பும், அவரது மனைவியும் வேறு ஊருக்கு மாறுதல் கேட்டு சென்றுவிட்டனர்.
பணி ஓய்வு
வருடங்கள் உருண்டோடின. 60 வயது ஆனதால் ஜோசப்பும் பணி ஓய்வு பெற்றுவிட்டார். பின்னர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்புதான் அவர்கள் மீண்டும் கோட்டயத்தில் உள்ள தங்கள் சொந்த வீட்டுக்கு வந்துள்ளனர். எத்தனை வருடங்கள் ஆனபோதிலும் மகள் பிறந்து வளர்ந்த வீட்டுக்கு வந்ததும் அவர்களுக்கு மகள் ஜோய்ஸின் நினைவு வந்துள்ளது. இருவரும் பெரிதாக வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே இருந்துள்ளனர். அரிதிலும் அரிதாக அவரது ஜோசப் வெளியே செல்லும் போது யாருடனும் பேசும் சூழல் ஏற்பட்டால், தனது மகள் செய்த குறும்புகள் பற்றியே அதிகமாக பேசுவாராம். இவ்வாறு மகளின் நினைவிலேயே வாழ்க்கையை இருவரும் ஓட்டி வந்திருக்கின்றனர்.
அதே இடத்தில் சம்பவம்
இந்த சூழலில்தான், நேற்று இரவு ஜோசப் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக தெள்ளுகம் பகுதிக்கு ஸ்கூட்டரில் சென்றுள்ளார். அப்போது 37 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகள் விபத்தில் சிக்கி உயிரிழந்த தெள்ளுகம் சந்திப்பு அருகே சரியாக 9.10 மணிக்கு சாலையை கடக்க ஜோசப் முயன்றார். அப்போது எதிரே வந்த அரசுப் பேருந்து ஜோசப்பின் ஸ்கூட்டர் மீது வேகமாக மோதியது. இதில் படுகாயமடைந்த ஜோசப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகள் உயிரிழந்த அதே இடத்தில், கிட்டத்தட்ட அதே நேரத்தில் தந்தையும் பல ஆண்டுகளுக்கு பின்னர் உயிரிழந்தது கோட்டயம் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.