கோவில்பட்டி: கோவில்பட்டியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு சூரிய ஒளி மூலம் இயங்கும் மூன்று சக்கர வாகனத்தில் சென்று பொருட்களை வியாபாரி விற்பனை செய்து வருகிறார். கோவில்பட்டி ஊரணி தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (42). பல்பு, பத்தி, சாம்பிராணி, மாவு வகைகள் உள்ளிட்ட பொருட்களை கடைகளுக்கு சப்ளை செய்து வியாபாரம் செய்கிறார். இருசக்கர வாகனத்தில் கடைகளுக்கு சென்று சப்ளை செய்து வந்த இவர், பெட்ரோலுக்கு தினமும் ரூ.100 முதல் 200 வரை செலவு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் பெட்ரோல் விலை உயர்வு கட்டுப்படியாகததால் தானே சூரிய ஒளி மூலம் இயங்கக்கூடிய மூன்று சக்கர வாகனத்தை தயார் செய்து தனது வியாபார பொருட்களை அதில் கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார். இதனால் அவருக்கு நாள்தோறும் ரூ.100 முதல் ரூ.200 வரை மிச்சப்படுவதாகவும், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுதாகவும் வியாபாரி செல்வகுமார் தெரிவித்தார். பொதுமக்கள் அவரை வெகுவாக பாராட்டினர்.