2011 ஆம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் உலகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் 150 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், மீண்டும் அப்படியான தாக்குதல் ஒன்று நடத்தப்படும் என பாகிஸ்தான் எண்ணில் இருந்து காவல்துறைக்கு வந்திருக்கும் எச்சரிக்கையால் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அதுவும் ராய்கட்டில் ஆயுதங்களுடன் படகு ஒன்று கரை ஒதுங்கிய ஒரு சில நாட்களுக்குள் வந்திருக்கும் இந்த செய்தி, மும்பை காவல்துறை வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
மகாராஷ்டிராவின் ராய்காட் கடல் பகுதியில் அண்மையில் மர்ம படகு ஒன்று கரை ஒதுங்கியது. அந்த படகில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராமாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில்இருந்து சுமார் 190 கி.மீ தொலைவில் ராய்காட் பகுதி அமைந்திருக்கிறது. அங்கு ஆயுதங்களுடன் கரை ஒதுங்கிய படகு குறித்த தகவலை அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற காவல்துறையினர், படகை கைப்பற்றி முழுமையாக ஆய்வு செய்தனர்.
அப்போது, அதில் இருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், துப்பாக்கி குண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றினர். இதுகுறித்து துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கொடுத்த விளக்கத்தில், கரை ஒதுங்கிய படகு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஹனா லோர்டோர்கன் என்ற பெண்ணுக்கு சொந்தமானது. அவரும் அவரது கணவர் ஜேம்ஸ் உட்பட 4 பேர் கடந்த ஜூன் 26-ம் தேதி மஸ்கட்டில் இருந்து ஐரோப்பாவுக்கு படகில் புறப்பட்டுள்ளனர்.
ஆனால் படகின் இன்ஜின் பழுதானதால் அவர்கள் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். அந்த வழியாக சென்ற கொரிய போர்க் கப்பலில் இருந்த அதிகாரிகள், இருவரையும் மீட்டு ஓமன் நாட்டில் ஒப்படைத்துள்ளனர்.அந்த தம்பதியால் கைவிடப்பட்ட படகு ராய்காட் பகுதிக்கு வந்துள்ளது. இதனால் மாநிலத்துக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை என தெரிவித்தார். இந்தநிலையில் மும்பை போக்குவரத்து காவல்துறைக்கு பாகிஸ்தான் எண்ணில் இருந்து அனுப்பப்பட்ட எச்சரிக்கை மெசேஜ் வந்துள்ளது. மும்பை தீவிரவாத தடுப்பு காவல்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளன.