எளியோரின் வலிமைக் கதைகள் 40: “கஸ்டமர் தர்ற புன்முறுவல்தான் எங்களுக்கான சர்ட்டிபிகேட்”

“அகத்தின் அழகு முகத்திலே” என்று சொல்லுவார்கள். முகம் பொலிவோடும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கிறவர்களிடம்தான் அதிக ஆர்வத்துடன் பேசுவார்கள் பழகுவார்கள். அப்படி முகம் பொலிவோடு இருப்பதற்கு சிகை அலங்காரம் ஒரு மிக முக்கியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. “தலைவாரிப் பூச்சூடி உன்னை பாடசாலைக்குப் போவென்று சொன்னாள் உன் அன்னை” என்று பள்ளிக்கு செல்லுகிற குழந்தையைகூட தலைவாரி ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் புரட்சி கவிஞர் பாரதிதாசன் பாடியுள்ளார். அப்படி தலை வாருதல் என்பது அழகியலில் மிக முக்கியமான அங்கமாகவே கருதப்படுகிறது. அப்படிப்பட்ட தலைவார நமக்குத் தேவை நல்ல சிகை அலங்காரம். அப்படி சிகை அலங்காரம் செய்யும் ஒரு எளிய மனிதரைப் பற்றி தான் இத்தொகுப்பில் இன்று பார்க்கப் போகிறோம்.
முடி வெட்டுற தொழிலில் டிப்ளமோ படித்த இளைஞர்:
“என் பேரு வெங்கடேசன். எனக்கு வயசு 34 ஆகுது. நான் பி.காம் பட்டம் படிச்சவன். எங்க அப்பா ஒரு ரயில்வே ஊழியர்; விபத்தில் உயிரிழந்துவிட்டார். எங்க தாத்தா இதே ஊருலதான் ஒரு காலத்துல முடிவெட்டுற கடை வைத்திருந்தார். அதைப் பத்தி எல்லாம் அம்மா சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். படிச்சு முடிச்சதோட எங்கெங்கோ வேலை தேடுனேன். பெருசா எதுவும் வேலை கிடைக்கல. அதனால எங்கு உறவினர் ஒருத்தர் கிட்ட வேலைக்கு போகலாம் என்று முடிவு பண்ணினேன். அவரும் என்னைப் போலவே ஒரு முடிவெட்ற கடை வைத்திருந்தார் அப்போ. எல்லாருமே காலம் காலமா குடும்பத்தொழிலாவே இப்படி முடி வெட்டுற கடை வச்சிருக்கிறது பார்த்த எனக்கு ஏன் நம்ம இதை பாடமா படிக்கக் கூடாது அப்படின்னு தோணுச்சு. “வீ கேர்” அப்படிங்கற நிறுவனத்தில் முடி வெட்டுகிற தொழிலை டிப்ளமோவா படிச்சேன்.
image
முன்னாடி முடி வெட்டுறதுக்கு காசு தரமாட்டாங்களாம்:
13 வருஷம் ஆயிடுச்சு நான் கடை திறந்து. முறையா படிச்சு இந்த தொழிலை கத்துக்கிட்டேன். நான் முதன் முதலில் கடை வைக்கும் போது சேவிங் கட்டிங்கு 50 ரூபா அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா விலைவாசி ஏற்றத்தால இப்ப சேவிங் கட்டிங் 150 ரூபாயும், கட்டிங் மட்டும் செஞ்சீங்கனா 100 ரூபாயும் வாங்குறேன்.
எங்க தாத்தா காலத்துல கிராமங்கள்ல குளத்தங்கரை ஓரம், இல்ல ஏரிக்கரை ஓரமா தான் இந்த முடி வெட்டும் தொழில் செய்வாங்க. அதுவும் ஏதாவது ஒரு மரத்து மேல தலையை சாய்ச்சி வச்சிட்டு வெட்டுவாங்க. சேவிங் பண்றதுக்கெல்லாம் இப்ப மாதிரி பிளேடு கிடையாது. கத்தி தான் அதையும் ரொம்ப ஷார்ப்பா சாண பிடிச்சு வச்சுக்கணும். அப்படிலாம் முடி வெட்டுவதற்கு இப்ப இருக்குற மாதிரி ரூபா கொடுப்பதெல்லாம் கிடையாது. வயல்வெளிகளில் விளையும் நெல், மணிலா, கம்பு, கேழ்வரகுன்னு தான் கொடுப்பாங்களாம்.
image
சாப்பாட்டுக்கு தானே வேலை செய்கிறோம். அதனால் தான் சாப்பாட்டு பொருளிலேயே கொடுத்திருந்தாங்க. அப்புறம் நாகரிகம் வளர வளர மற்ற தேவைகளை பூர்த்தி செய்யனும்னா பணம் தேவைப்பட்டுச்சு. அப்புறம் தான் பணம் வாங்குகிற இந்தப் பழக்கம் வந்ததா பெரியவங்க சொல்லுவாங்க.
ஒவ்வொருத்தர் தலையும் ஒவ்வொரு மாதிரியா இருக்கும் அவங்க தலைக்கு ஏற்றவாறு ஒழுங்குபடுத்தி முடி வெட்டணும். சாதாரணமா ஒரு நபருக்கு முடி வெட்டுவதற்கு 15 நிமிஷத்தில் இருந்து அரை மணி நேரம் வரைக்கும் ஆகும். வாடிக்கையா ஒரே இடத்துல முடி வெட்டுறவங்களா இருந்தாங்கன்னா வேலை கொஞ்சம் ஈஸி. புதுசு புதுசா வந்தாங்கன்னா அவங்கள கேட்டு கேட்டு தான் இந்த வேலையை செய்யணும். ஒரு நாளைக்கு பத்து பேர் வரைக்கும் கஸ்டமர் வருவாங்க. அவங்க என்ன கேக்குறாங்களோ அப்படி அவங்களுக்கு கட்டிங் சேவிங் எல்லாம் செய்து கொடுப்பேன்.
image
ஒவ்வொரு சேவிங்குக்கும் புது பிளேடுதான்:
எனக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைங்க இருக்காங்க. இதுல வர வருமானத்தை வைத்துக்கொண்டு தான் குடும்பத்தை கவனிக்கிறேன். என் தம்பியும் என் கூட தான் வேலை பார்க்கிறான். +2 வரைக்கும் படிச்ச அவனை வெளியில வேலைக்கு அனுப்புறதுக்கு எனக்கு மனசு இல்ல. ஏன்னா எனக்கும் உதவிக்கு ஒரு ஆள் தேவை. ஒரு நாள் ரெண்டு நாள் உடம்பு சரியில்லாமல் இல்ல விசேஷங்களுக்கு போனா மாற்று ஆள் வேணும். செவ்வாய்க்கிழமை தோறும் கடை விடுமுறை தான். ஆனால் மற்ற நாட்களில் கடை மூடியிருந்தா நம்மளுடைய ரெகுலர் கஸ்டமர் நம்மகிட்ட இருந்து வேற யாருக்கோ போயிடுவாங்க.
என்ன மாதிரி விழுப்புரத்தில் மட்டும் எண்பதுக்கும் மேற்பட்ட முடிவெட்ற கடைகள் இருக்கு. ஒவ்வொரு முறையும் சேவிங் பண்ணும்போது புது புது பிளேடு தான் பயன்படுத்தணும். இப்ப எல்லாம் நோய் தொற்று அதிகமா பரவுகிற காலமா மாறிப்போச்சு. அதனால ஒரே பிளேடு எல்லோருக்கும் பயன்படுத்தினா நோய் பிரச்னை வேற இருக்கும். அப்படி என்பதால் ஒவ்வொருத்தருக்கும் தனித்தனி பிளேடு தான் பயன்படுத்துவேன். நான் மட்டும் இல்ல பெரும்பாலும் முடிவெட்டுறவங்க எல்லாரும் அப்படித்தான் பிளேடுகளை பயன்படுத்துவாங்க.
image
வாடிக்கையாளர் தரும் புன்முறுவல் தான் எங்களுக்கான சர்ட்டிபிகேட்:
இன்னொருத்தங்களை அழகு படுத்துவது அப்படிங்கறது பெரிய வேலைங்க. அவங்க மனசு திருப்தி அடைகிற மாதிரி அழகுபடுத்தனும். அதுதான் இதுல முக்கியம். முடிவெட்ற தொழில்தான அப்படின்னு நான் ஒரு நாள் கூட இந்த தொழில கேவலமா நினைக்கிறது இல்ல. ஒவ்வொரு முறையும் அவங்க கண்ணாடியை பார்க்கும்போது அவங்க எண்ணத்துக்கு முன்னாடி என்ன போல அலங்காரம் செய்றவங்க தான் நிப்பாங்க.
தலை வாரிவிட்டு கண்ணாடியில் ஒரு புன்முறுவல் செய்வாங்க. அதுதாங்க அவங்க எங்களை போன்ற ஆட்களுக்கு கொடுக்கிற சர்டிபிகேட். ஒரு காலத்துல குறிப்பிட்ட சாதியா இந்த தொழில் செஞ்சுகிட்டு இருந்தவங்க. இப்ப எல்லா சாதிகளிலும் முடிவெட்டுறவங்க வந்துட்டாங்க. நவீனமயத்தால் கத்திரிக்கோல், பிளேட் எல்லாம் தாண்டி மிஷின்களா கூட இப்ப வந்துடுச்சு. முதுமையா இருக்கறவங்கள ஒரு அரை மணி நேரத்துல தலைக்கு சாயம் போட்டு இளமையா மாத்தி காட்டுவோம்.
image
சிலர் விதவிதமான மீசை கேட்பாங்க. தாடி கேட்பாங்க. இன்னும் சிலர் தலைமுடியை விதவிதமா வெட்டணும். இன்னுன் நிறைய விஷயம் சொல்லுவாங்க. அவங்க எப்படி கேக்குறாங்களோ அப்படி எல்லாம் அந்த வேலையை செஞ்சு கொடுப்பேன். தவறுதலா அழகு இல்லாம வேலை செஞ்சா ‘தலை முடிய எங்க வெட்டினன்னு’ கேட்டாங்கன்னா நம்ம பேரை சொல்லுவாங்களே அப்படிங்குறதுனால தான் ஒரு ஒழுங்கோட அதையும் செய்து கொடுக்குறேங்க. ரோட்ல நடக்கும்போது நம்மகிட்ட முடி வெட்டினவங்கள பாத்தா ஒரு மகிழ்ச்சி இருக்கும். மனசில அந்த மகிழ்ச்சியோடு தான் இன்னமும் வாழ்க்கையை ஓட்டிகிட்டே இருக்கிறோம்.” என்றார் வெங்கடேசன். அடுத்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவது அப்படிங்கறது ஒரு பெரிய கலை. அந்த கலையை இந்த சிகை அலங்காரம் செய்கிறவர்கள் திறம்படவே செய்கிறார்கள் என்றே சொல்லலாம். அடுத்த வாரம் இன்னொரு எளிய மனிதரோட உங்களை சந்திக்கிறோம்.
– ஜோதி நரசிம்மன்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.