ராஞ்சி: சுரங்க குத்தகை வழக்கால் ஹேமந்த் சோரன் பதவிக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், அவரது மனைவியை மாநில முதல்வராக்க ஏற்பாடுகள் நடப்பதாக கூறப்படுகிறது. ஜார்கண்ட் முதல்வரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் மீது ராஞ்சியின் வெவ்வேறு காவல் நிலையங்களில் மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் சுரங்க குத்தகை ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணையை தேர்தல் ஆணையம் முடித்துள்ளது.
எந்த நேரத்திலும் தேர்தல் ஆணையம் தனது முடிவை அறிவிக்கலாம் என்பதால், ஹேமந்த் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, முதல்வர் ஹேமந்த் சோரன் (எம்எல்ஏ பதவி) தகுதி நீக்கம் செய்யப்படலாம் அல்லது தனது பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இக்கட்டான இந்த சூழ்நிலையில், நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்பது குறித்து விவாதிக்க இன்று எம்எல்ஏக்கள் கூட்டம் ஹேமந்த் சோரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து ஆளுங்கட்சி எம்எல்ஏக்களும் ஆஜரானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ஹேமந்த் சோரனுக்கு பதிலாக அவரது மனைவி கல்பனாவை முதல்வர் பதவியில் அமர்த்த திட்டமிட்டு இருப்பதாக எதிர்கட்சியான பாஜக கூறி
யுள்ளது. இதுகுறித்து ஜார்கண்ட் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே கூறுகையில், ‘ஜார்க்கண்டில் ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளது. முதல்வரின் மனைவிக்கு முடிசூட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. தும்கா சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது’ என்றார். ஆளுங்கட்சி தலைவர் தலைவர் சுப்ரியோ பட்டாச்சார்யா கூறுகையில், ‘மாநிலத்தின் வறட்சி குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது’ என்றார்.