காசநோய் தடுப்பூசி விரைவில் அறிமுகம்: அமைச்சர் சொன்ன அப்டேட்!

காசநோயை ஊசிகளின் மூலம் குணப்படுத்தவும், குறுகிய காலகட்டத்தில் மருந்துகளை உட்கொண்டு குணப்படுத்தும் ஆராய்ச்சியை தேசிய காசநோய் ஆராய்ச்சி நிருவனம் மேற்கொண்டு வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்

சென்னை சேத்துப்பட்டில் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் 65ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “கடந்த மாதத்தில் ஒன்றிய அமைச்சரோடு இங்கு வரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த நிறுவனம் இந்தியாவை தாண்டி உலக அளவில் சிறந்த ஆராய்ச்சி நிறுவனமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலை இருந்தது. தற்போது அந்த நிலை மாறியுள்ளது.

மேலும், முதற்கட்ட காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆறு மாதத்திற்கு வீட்டிலேயே இருந்து மருந்துகளை உட்கொள்ள வேண்டிய நிலையில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்துகள் சரியாக உட்கொள்வது இல்லை என்று மருத்துவர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள். மேலும், குடி பழக்கத்தில் இருப்பவர்கள் நோயின் தன்மை சற்று குறைந்தாலே மருந்து உட்கொள்வதை தவிர்த்து விடுகிறார்கள். அப்படி செய்தால் நோய் பாதிப்பு அதிகரிக்கும்.

2025 ஆம் ஆண்டிற்குள் 100% காசநோய் இல்லாத தமிழகம் உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவித்து இருக்கிறார். அதன் அடிப்படையில் 10.65 கோடி மதிப்பீட்டில் 23 காசநோய் விழிப்புணர்வு வாகனம் தமிழகம் முழுவதும் சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்து வருகிறது. இந்த டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் 19 ஆயிரம் பேருக்கு காசநோய் பரிசோதனை ( screening) செய்து இருக்கிறோம்.

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தற்போது செயல்பட்டு வரும் வருமுன் காப்போம் திட்டத்தில் மூலம் கடந்த ஆண்டு மட்டும் 1260 முகாம் நடத்தப்பட்டு 10 லட்சம் பேருக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, இந்த ஆண்டு தொடர்ந்து இந்த மருத்துவ திட்டத்தின் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. வருமுன் காப்போம் திட்டம் முகாம் நடைபெறும் இடத்தில் காசநோய் பரிசோதனை செய்து வருகிறோம்.

உலகில் 41% பேர் காசநோய் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். அதனை குறைக்க காசநோயை ஊசிகளின் மூலம் குணப்படுத்தவும், குறுகிய காலகட்டத்தில் மருந்துகளை உட்கொண்டு குணப்படுத்தும் ஆராய்ச்சியை தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருவதாக கூறினார். மேலும், தமிழக அரசு கடந்த ஆண்டு காசநோயை ஒழிக்க 31 கோடியே 32 லட்சம் நிதி வழங்கப்பட்டது. அதனை இந்த ஆண்டு இரட்டிப்பாக அதிகரித்து 68 கோடியே 28 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மற்றும் காச நோயால் பாதிக்கப்பட்ட 80 ஆயிரம் பேரை கண்டறிவதற்கான இலக்கானது வைக்கப்பட்டிருந்தது. அதில் இந்தியா அளவில் 54% பேரை மட்டுமே கண்டறிந்துள்ள நிலையில் தமிழகத்தில் 72 சதவீதம் கண்டறிந்திருக்கிறோம்.

மேலும், காசநோய் காற்றில் பரவும் தன்மை கொண்டுள்ளது, தன்னுடைய நலனை கருத்தில் கொள்ளாமல் மற்றவர்களை நலத்தை கருத்தில் கொண்டு இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என தெரிவித்தார்.

அதற்கு முன்பு மேடையில் பேசிய ஐசிஎம்ஆர் நிறுவனத்தின் துணைத் தலைமை இயக்குனர், “தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம், காசநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளதாக கூறிய அவர், விரைவில் காசநோய்க்கான தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும். அதேபோல, சிக்கன் குனியா மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசிகள் சோதனை முறையில் உள்ளன” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.