மும்பை: ‘மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடந்த பயங்கரமான தீவிரவாத தாக்குதலைப் போன்ற மற்றொரு தாக்குதல் நடத்தப்படும்’ என பாகிஸ்தான் எண்ணிலிருந்து மிரட்டல்கள் வந்திருப்பதால், மும்பையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, கடலோ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் போக்குவரத்து போலீசாரின் கட்டுப்பாட்டு அறை ஒர்லி பகுதியில் இயங்கி வருகிறது. இங்குள்ள, வாட்ஸ் அப் ஹெல்ப்லைன் எண்ணுக்கு பாகிஸ்தான் தொலைபேசி எண்ணிலிருந்து நேற்று முன்தினம் சில குறுந்தகவல்கள் வந்துள்ளன. அதில், ‘மும்பையில் 26/11 போன்ற பயங்கரமான தாக்குதல் சம்பவம் மீண்டும் நடத்தப்படும். மும்பை நகரம் தகர்க்கப்படும்’ என மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருப்பதாக மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சால்கர் நேற்று தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டியில், ‘‘பாகிஸ்தான் எண்ணிலிருந்து மிரட்டல்கள் வந்துள்ளன. அதில், சமீபத்தில் கொல்லப்பட்ட அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல் ஜவாஹிரி, மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் காசப் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவர்களின் உதவியாளர்கள் சிலர் இந்தியாவில் செயல்படுவதாகவும், 6 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தப் போவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை நாங்கள் தீவிரமாக எடுத்து நடவடிக்கை எடுத்துள்ளோம். நகரம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கடலோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மிரட்டல் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.
முன்னதாக, கடந்த இரு தினங்களுக்கு முன்பாக, மும்பை அருகே ராய்கட் கடல் பகுதியில் மர்ம படகு ஒன்று சிக்கியது. அதில் ஏகே 47 ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. அதைத் தொடர்ந்து, தீவிரவாத தாக்குதல் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் கடல் வழியாக புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் நடத்திய பயங்கர தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்திய வரலாற்றில் நடந்த மிகக் கொடூரமான தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.