“எடப்பாடியின் பரிணாம வளர்ச்சிக்கு அவரது உழைப்பே காரணம்.ஆனால்”…. – ஓ.பி.ரவீந்திரநாத் சொல்வது என்ன..?

சில தினங்களுக்கு முன்பாக ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது ஓபிஎஸ் ஆதரவாளர்களை குஷிப்படுத்தியது. இந்நிலையில் இன்று மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே திமுகவை எதிர்கொள்ள முடியும். அதிமுக எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்திற்கு பிறகு இந்த இயக்கம் பல்வேறு சோதனைகளை கடந்து வந்துள்ளது. அதிமுக பொதுக்குழுவின் போது ஓபிஎஸ் பல அவமானங்களை சந்தித்துள்ளார். கழகம் ஒன்றுபட வேண்டும் என்ற நோக்கத்தோடு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

திமுகவை வீழ்த்த அதிமுக ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ் விரும்புகிறார். எடப்பாடியின் பரிணாம வளர்ச்சிக்கு அவரது உழைப்பே காரணம் அதனை நான் வரவேற்கிறேன். ஜெயலலிதா பொது செயலாளராக துவங்கி அவர் மரணமடைந்தது வரை அனைத்து நிலைகளிலும் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் ஓபிஎஸ். எடப்பாடி பழனிச்சாமி தொண்டர்களை குழப்பும் சூழலை ஏற்படுத்தி வருகிறார். என்னை தேனி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டாம் என வலியுறுத்தியவர் ஓபிஎஸ்.

நான் முதல்வரை சந்தித்ததாக விமர்சனம் செய்யும் நபர்கள் நாடாளுமன்றத்தில் திமுகவினருடன் சண்டையிட்டுள்ளதை ஏன் கூற மறுக்கிறார்கள்? திசா கமிட்டியில் நான் உறுப்பினர் என்ற அடிப்படையில் திசா கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டேன். அப்போது முதல்வரை சந்தித்தேன். அதனை அரசியாலாக்குவது வருத்தம் அளிக்கிறது.
எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட யார் யாரெல்லாம் கட்சியிலிருந்து பிரிந்து சென்றார்களோ அனைவரும் ஒரே குடைக்குள் வர வேண்டும் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது . நிரந்தர பொது செயலாளர் பதவி ஜெயலலிதா ஒருவருக்கு மட்டும்தான், அது தொண்டர்கள் எடுத்த முடிவாகும்.
எடப்பாடி பழனிச்சாமி கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துவது கட்சிக்கு நல்லதல்ல. நான்கரை ஆண்டுகளாக இரட்டை தலைமையில் தான் அதிமுக ஆட்சி நடைபெற்றது. அதில் எந்த குறைபாடும் இல்லை ஆனால் குறை சொல்வதற்காக ஒற்றை தலைமை என கூறுகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் உள்ளாட்சி தேர்தலிலும் தோல்வியடைந்தது இரட்டை தலைமையால் என குற்றம் கூறுவது ஏற்புடையதல்ல” எனக் கூறினார்.

ஓ.பி.ரவீந்திரநாத்தின் இந்த பேட்டி அதிமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.