மலையாள படம் போல யதார்த்தமான கதையில் நடிக்க பாலகிருஷ்ணா விருப்பம்

ஐதராபாத்: மலையாள படத்தை போல ஒரு யதார்த்தமான கதையில் நடிக்க பாலகிருஷ்ணா விரும்புகிறார் என்றார் ஹனிரோஸ். தெலுங்கு சினிமாவில் மாஸ் மசாலா பட ஜானருக்கு பெயர் போனவர் பாலகிருஷ்ணா. இவரது படங்களில் லாஜிக் இருக்காது. ஆக்‌ஷன் காட்சிகளில் பலவித வித்தைகள் செய்வார். ஹீரோயிச பில்டப் அதிகம் இருக்கும். பி அண்ட் சி சென்டரில் இவரது படங்கள் பெரிய ஹிட் அடிக்கும். இவருக்கான ரசிகர்கள் பட்டாளமும் ஏராளம். கடைசியாக இவர் நடித்த அகண்டா படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

தமிழில் ஜீவாவுடன் சிங்கம் புலி படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஹனிரோஸ். மேலும் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். மலையாள நடிகையான இவர், தெலுங்கிலும் பல படங்களில் நடித்திருக்கிறார். இப்போது பாலகிருஷ்ணாவுடன் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதில் பாலகிருஷ்ணாவுக்கு கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் ஜோடி. கோபிசந்த் மாலினேனி இயக்கி வருகிறார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் ஹனிரோஸ்.

அவர் கூறும்போது,‘சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக பாலகிருஷ்ணாவுடன் ஒரு கிராமத்துக்கு சென்றுகொண்டிருந்தேன். அப்போது பாலய்யாவின் காரை பின்தொடர்ந்து ஆயிரம் ரசிகர்கள் வந்துகொண்டிருந்தனர். அதை பார்த்து ஆச்சரியப்பட்டேன். பாலய்யாவுக்கு இருக்கும் மாஸ் இமேஜ், குறிப்பிட்ட சில நடிகர்களுக்கு மட்டுமே கிடைக்கும் பொக்கிஷமாகும். அப்படிப்பட்ட பாலய்யா, என்னிடம் பேசும்போது, மலையாள சினிமாவை வெகுவாக பாராட்டினார். யதார்த்தமான கதைகள் மலையாளத்தில்தான் எடுக்கிறார்கள். அதுபோன்ற ஒரு படத்தின் ரீமேக்கில் நடிக்க விரும்புகிறேன். ஆனால் எனக்கான இமேஜ் அதை தடுக்கிறது எனக் கூறி வருத்தப்பட்டார்’என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.