கோவை: ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக கோவையில் சிபிசிஐடி சிறப்பு குழுவினர் விசாரணை நடத்தினர். திருச்சியை சேர்ந்த தொழிலதிபர் ராமஜெயம், திருச்சி திருவளர்ச்சோலை பகுதியில் கடந்த 29.3.2012ல் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக தற்போது சிபிசிஐடி போலீசாருக்கு முக்கிய தடயமாக, மாருதி சுசுகி வெர்ஷா கார் ஒன்று கொலை சம்பவம் நடைபெற்ற நாளில் அப்பகுதியில் சென்றது தெரியவந்துள்ளது.
அங்கிருந்த சிசிடிவி கேமராவில் இது பதிவாகியுள்ளதாக தெரிகிறது. அதில் கொலையாளிகள் தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகம் நிலவுகிறது. இது தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சிறப்பு விசாரணை குழு, 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாருதி சுசுகி வெர்ஷா வாகனத்தின் உரிமையாளர்களின் பட்டியலை சிபிசிஐடி போலீசார் திரட்டினர்.
பின்னர் வாகன உரிமையாளர்களின் வீட்டு முகவரிக்கு சென்று ரகசிய விசாரணையில் இறங்கி உள்ளனர். இதில், கார் யார் பெயரில் உள்ளது? அவர்களுக்கு குற்ற பின்னணி ஏதேனும் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள். கோவையில் 250க்கும் மேற்பட்ட மாருதி சுசுகி வெர்ஷா உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.