இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 31-ந் தேதி விநாயகர் சதூர்த்தி தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் சிலைகளை நீரில் கரைப்பது தொடர்பான விதிமுறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
ஆண்டு தோறும் ஆவனி மாதத்தில் வரும் வளர்பிறை சதூர்த்தி நாளில் விநாயகர் சதூர்த்தி தினம் கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக கருத்தப்படும் இந்த விநாயகர் சதூர்த்தி நாளில் மக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலை செய்து அதற்கு பூஜை செய்து வழிபட்டு, அடுத்த 3-வது நாளில் நீரில் கரைப்பது வழக்கம்.
நாடு முழுவதும் பல ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் இந்த பண்டிகைகக்கு சமீப ஆண்டுகளாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. சில ஆண்டுகள் முன்புவரை களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை வைத்து வழிப்பட்டு வந்த நிலையில், தற்போது ரசாயனம் கலந்த விநாயகர் சிலை அதிகம் புழக்கத்தில் உள்ளது. இந்த சிலைகளை எடுத்து நீரில் கரைக்கும்போது நீர் மாசுபாடு ஏற்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க கடந்த சில ஆண்டுகளாக கடுமையான கட்டப்பாடுகளை விதித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு விநாயகர் சதூர்த்தி வரும் ஆகஸ்ட் 31-ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பது குறித்த விதிமுறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நீரில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு பதிப்பை ஏற்படுத்தாத மூலப்பொருட்களால் தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பாதுகாப்பான முறையில் நீர்நிலைகளில் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிலைகளின் ஆபரணங்களை தயாரிப்பதற்காக உலர்ந்த மலர்கள், வைக்கோல், மரங்களின் இயற்கை பிசின் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் உள்ளிட்ட பொருட்களை நீர் நிலைகளில் கரைக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவையில் தயார் செய்யப்பட்ட சிலைகளை கரைக்க கூடாது என்றும், சிலைகளுக்கு வர்ணம் பூச செயற்கை ரசாயன பொருட்களை பயன்படுத்த கூடாது என்றும், சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும் என்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“