ஐதராபாத்: தியேட்டரில் வெளியாகும் படத்தை 8 வாரங்கள் கழித்தே ஓடிடிக்கு வழங்க வேண்டும் என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
தெலுங்கு சினிமாவில் தற்போது படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஓடிடிக்கு படம் வழங்குதல், தியேட்டர் கட்டணம், நடிகர்களின் சம்பளம் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக பேசி முடிவு செய்துவிட்டு இதில் சுமூக முடிவுகள் எடுக்கப்பட்டால் படப்பிடிப்புகள் தொடங்கும் என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்து இருந்தது. அதன்படி தற்போது தெலுங்கு படப்பிடிப்புகள் நடைபெறவில்லை. இந்நிலையில் ஓடிடிக்கு படம் வழங்குவது தொடர்பாக நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதில், படம் தியேட்டர்களில் வெளியாகி சில வாரங்களிலேயே ஓடிடிக்கு விற்கப்படுகிறது.
ஓடிடியில் விரைவில் படம் ஒளிபரப்பு செய்யப்படுவதால், தியேட்டர்களில் ஓடுவதில்லை என தியேட்டர் அதிபர்கள் புகார் கூறுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். எனவே தியேட்டர்களில் படம் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியாக வேண்டும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதை மற்ற தயாரிப்பாளர்களும் ஏற்றுக்கொண்டனர். இதேபோல் தியேட்டர் டிக்கெட் கட்டணம், விபிஎப் கட்டணம், நடிகர்களின் சம்பளம் ஆகியவை குறித்தும் முடிவு செய்யப்பட்டு, விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.