பார்வையாளர்கள் முன் அநாகரிகம்; விஜய் தேவரகொண்டாவுக்கு சிக்கல்

ஐதராபாத்: பார்வையாளர்கள் முன் அநாகரிகமாக நடந்துகொண்டதாக விஜய் தேவரகொண்டாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. லைகர் படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். ரசிகர்களும் அரங்கில் நிரம்பி வழிந்தனர். இந்த நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டாவும் அனன்யா பாண்டேவும் கலந்துகொண்டனர்.

அப்போது நாற்காலியில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்த விஜய் தேவரகொண்டா, திடீரென தனது இரண்டு கால்களையும் எடுத்து அங்கிருந்த மேஜை மீது வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார். அருகில் இருந்த பார்வையாளர்களுக்கு இது அசவுகரியமாக பட்டது. இந்த புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி, வைரலானது. பார்வையாளர்கள் முன்பு விஜய் தேவரகொண்டா எப்படி இவ்வாறு அநாகரிகமாக நடந்துகொள்ளலாம் என நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தனது செயலுக்காக விஜய் தேவரகொண்டா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் இது பற்றி தனது இன்ஸ்டாகிராமில் விஜய் தேவரகொண்டா குறிப்பிடும்போது,‘உங்கள் துறையில் நீங்கள் வளரும்போது, முதுகில் ஏதாவது சுமையை ஏற்றி வைக்க நினைப்பார்கள். உங்களின் செயலில் நீங்கள் நேர்மையாக இருந்தால், மக்களின் அன்பும் ஆதரவும் எப்போதும் கிடைக்கும்’என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.