திருநெல்வேலி: தமிழகத்தின் தென்பகுதி வீரம்செறிந்த மண் என்று ஆளுநர் ஆர்.என். ரவி, பாளையங்கோட்டையில் நேற்று தெரிவித்தார்.
இந்தியாவின் 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவின் ஒருபகுதியாக தபால்துறை சார்பில், சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் தபால்தலை வெளியீட்டு விழா பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்றது. தபால் தலையை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டு பேசியதாவது:
தமிழகத்தின் தென்பகுதி வீரம்செறிந்த மண். ஏராளமான சுதந்திரப் போராட்ட வீரர்கள் இங்கு இருந்துள்ளனர். ஆயுதங்களால் மட்டுமல்ல, எழுத்துகளாலும் ஆங்கிலேயர்களை எதிர்த்தவர்கள் இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள்.
வேலூர் புரட்சியின்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் பலரும் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் மறக்கப்பட்டுவிட்டார்கள். நமது வளமையான, உண்மையான வரலாற்றை ஆங்கிலேயர் மறைத்துவிட்டனர். ஆனாலும், ஒண்டிவீரன், கட்டபொம்மன் போன்றவர்களின் வரலாற்றை மக்கள் மனங்களில் இருந்து மறைக்க முடியவில்லை.
ஆங்கிலேயர்கள் இந்தியாவின் உண்மையான வரலாற்றை சிதைத்து, தவறான வரலாற்றை சித்தரித்துள்ளனர். சென்னை மாகாணத்தின் ஆளுநராக வில்லியம் பெண்டிங் பிரபு இருந்தபோது, நடத்தப்பட்ட ஆய்வில், உயர்கல்வி படித்தவர்களின் எண்ணிக்கையில் பட்டியல் இனத்தவர்கள் அதிகம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியா எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் இருந்தது இதன்மூலம் தெரிகிறது.
இந்தியா வெவ்வேறு மன்னர்களின் ஆளுகைக்குள் இருந்தாலும், வெவ்வேறு மொழி, கலாச்சாரம், பண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் ஒரே தேசமாக இருந்தது. வடஇந்தியாவிலிருந்து தென்னிந்தியாவுக்கு வந்து பலர் கல்வி பயின்றுள்ளனர். ஆங்கிலேயர்கள் அதனை பிளவுபடுத்தி நிலத்தைப் பிரித்தனர். அந்நிலையை மாற்றி ஒண்டிவீரன், பூலித்தேவன், வேலுநாச்சியார், பாரதியார், வ.உ.சிதம்பரனார் போன்றோர் கனவு கண்ட இந்தியாவை உருவாக்க வேண்டும்.
தமிழகத்தில் கல்வி, சுகாதாரம் ஆகியவை வளர்ந்துள்ளன. தேசிய அளவில் உயர் கல்வி படித்தவர்களின் எண்ணிக்கை 28 சதவீதம். ஆனால் தமிழகத்தில் இது 50 சதவீதமாக உள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக இந்தியா உருவெடுக்க அனைவரும் பாடுபட வேண்டும். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.
தெலங்கானா ஆளுநர்
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது: ஒரு பலம் அல்ல இரட்டை பலத்தை அடைய வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். கடந்த காலங்களில் அடக்கப்பட்ட சமுதாயம் தற்போது வீறுகொண்டு எழுந்துள்ளது. பாளையக்காரர்களாக, சட்டம் இயற்றியவர்களாக இருந்தவர்களை ஆங்கிலேயர்கள் அடக்கி ஆண்டார்கள். அடக்கப்பட்டவர்களை தற்போது பிரதமர் மோடி, அரசாள வைத்துள்ளார்.
ஒண்டிவீரனின் தியாகத்தால் மத்திய அமைச்சராக எல்.முருகன் இந்த மேடையில் அமர்ந்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர்களின் மறைக்கப்பட்ட வரலாற்றைப் படித்து இளைஞர்கள் உத்வேகம் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசும்போது, ‘‘அறிந்திடாத சுதந்திரப் போராட்ட வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளது. 100-வது சுதந்திரதினத்தை கொண்டாடும்போது வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா உருவாக்கப்பட வேண்டும் என்ற பிரதமரின் கனவை நனவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’’ என்றார்.
தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எம். மதிவேந்தன் பேசும்போது, ‘‘சுதந்திரப் போராட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் சிறப்பிடம் பெற்றவரான ஒண்டிவீரனுக்கு மணிமண்டபம் அமைக்க முன்னாள் முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டி கவுரவித்தார்’’ என்றார்.
விழாவில் எம்.பிக்கள் ஞானதிரவியம், அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏக்கள் அப்துல் வஹாப், நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி, தமிழ்நாடு தபால் துறை தலைவர் எஸ்.ராஜேந்திரகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.