வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : ‘தாய்மை காலத்தில் ஒவ்வொரு கர்ப்பிணியும் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்’ என கூறிய டில்லி உயர் நீதிமன்றம், கொலை முயற்சி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு, பிரசவத்துக்காக மூன்று மாத இடைக்கால, ‘ஜாமின்’ வழங்கி உத்தரவிட்டது.
டில்லியைச் சேர்ந்த ஒரு பெண், கொலை முயற்சி மற்றும் கடத்தல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அந்த பெண் தற்போது கர்ப்பமாக இருப்பதால், சிறையில் போதிய வசதிகள் இல்லை என கூறி, ஆறு மாதம் ஜாமின் அளிக்கும்படி, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி அனுாப் குமார் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘கைது செய்யப்பட்டுள்ள பெண், மிகக் கொடிய குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை ஜாமினில் விடுவிக்கக் கூடாது’ என எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:தாய்மை காலத்தில் ஒவ்வொரு கர்ப்பிணியும் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும். இதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் உரிமை அளித்து உள்ளது. சிறைக் காவலில் இருக்கும்போது குழந்தையை பெற்றெடுப்பது, அந்த பெண்ணுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதுடன், அந்த குழந்தையின் எதிர்காலத்தையும் நீண்ட காலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
அந்த குழந்தையின் பிறப்பு குறித்து கேள்வி கேட்கும்போதெல்லாம், அந்த பாதிப்பு நீடிக்கும்.ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது, அவரது உடல் நலனில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். பிரசவத்துக்காக கர்ப்பிணியை சிறைக்கு வெளியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க, இடைக்கால ஜாமின் வழங்க, சிறைத்துறை விதிகள் அனுமதி அளிக்கின்றன. இதை கருத்தில் வைத்து, அந்த பெண்ணுக்கு மூன்று மாதம் இடைக்கால ஜாமின் வழங்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement