இஸ்லாமாபாத்: அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை மாணவ, மாணவியர் பாகிஸ்தானில் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். அவர்கள் நேற்று முன்தினம் பிரதமர் ஷாபாஸ் ஷெரீபை சந்தித்து பேசினர். அப்போது பிரதமர் ஷெரீப் கூறியதாவது:
தெற்காசியாவில் அமைதி நிலவ வேண்டும் என்பதே பாகிஸ்தானின் விருப்பம். காஷ்மீர் பிரச்சினைக்கு போரின் மூலம் தீர்வு காண முடியாது. ஐ.நா. சபையின் தீர்மானங்கள், காஷ்மீர் மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தையை தொடர வேண்டும். இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நடைபெறுவது இருநாடுகளுக்குமே நல்லதல்ல.
எங்களது நாட்டை காக்கும் பணியில் மட்டுமே ராணுவம் ஈடுபட்டிருக்கிறது. சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. இரு நாடுகள் இடையே அமைக்கப்பட்டிருக்கும் வர்த்தக பாதை எங்களது பொருளாதாரத்தை ஊக்குவிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானுக்கான ஆஸ்திரேலிய தூதராக நீல் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீபை கடந்த 18-ம் தேதி சந்தித்துப் பேசினார். அப்போது ஷெரீப் கூறும்போது, “தெற்காசியாவில் அமைதியை நிலைநாட்டவும் காஷ்மீர் விவகாரத்தில் சுமூக தீர்வை எட்டவும் சர்வதேச சமுதாயம் முக்கிய பங்காற்ற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சார்பில் சர்வதேச தீவிரவாத தடுப்பு பயிற்சி வரும் அக்டோபரில் இந்தியாவின் ஹரியாணாவில் நடைபெற உள்ளது. இதில் பாகிஸ்தான் குழு பங்கேற்கும் என்று பாகிஸ்தான் வெளியுறவு துறை கூறியுள்ளது.