மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக வந்து தாக்குதலில் ஈடுபட்டனர். 10 தீவிரவாதிகள் நள்ளிரவில் படகு மூலம் மும்பை வந்து நடத்திய இத்தாக்குதல் இரண்டு நாள்கள் வரை நீடித்தது. உலகம் முழுவதும் இத்தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தாக்குதலில் தீவிரவாதிகள் 9 பேர் உட்பட 175 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் மும்பை போலீஸாருக்கு புதிய மிரட்டல் ஒன்று வந்திருக்கிறது. அதில், “26/11-ல் மும்பையில் நடத்தப்பட்டது போன்ற ஒரு தாக்குதல் மீண்டும் நடத்தப்படும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் 6 பேர் ஈடுபடுவார்கள் என்றும், நான் எங்கு இருக்கிறேன் என்பதை வேண்டுமானால் சோதித்து பார்த்துக்கொள்ளலாம் என்று அந்த மிரட்டல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மும்பை டிராபிக் போலீஸ் கட்டுப்பாட்டு அறை வாட்ஸ்ஆப் எண்ணுக்கு இந்த மிரட்டல் அனுப்பப்பட்டு இருக்கிறது. இம்மிரட்டல் குறித்து மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய உளவு ஏஜென்சியும் இது குறித்து விசாரித்து வருகிறது. இந்த மிரட்டலை உறுதிபடுத்தும் விதமாக கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மும்பை அருகே கடற்கரையில் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளுடன் மர்ம படகு ஒன்று கரை ஒதுக்கியது. ராய்கட் அருகே இப்படகு கரை ஒதுங்கிய இடத்தில் தேசிய புலனாய்வு ஏஜென்சியும், மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படையும் விசாரணை நடத்தி வருகிறது. ஆரம்பக்கட்ட விசாரணையில் இப்படகு ஆஸ்திரேலிய பெண் ஒருவருக்கு சொந்தமானது என்று தெரிய வந்தது. அவரும், அவரின் கணவரும் படகில் சென்று கொண்டிருந்த போது எஞ்சினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த படகை கைவிட்டுவிட்டு சென்றது தெரிய வந்துள்ளது.
படகு அப்படியே அலைகளில் இழுத்து வரப்பட்டுள்ளது. மும்பையில் அடுத்தடுத்து விழாக்காலங்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விழாக்காலங்களில் பாகிஸ்தானில் இருந்து மிரட்டல் வந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இம்மிரட்டல் குறித்து மும்பை துணை போலீஸ் கமிஷனர் ஹரிபாலாஜியிடம் கேட்டதற்கு, “மிரட்டல் செய்தியையடுத்து முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரவு ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.